அருள்மிகு புவனேஸ்வரி ஆலயம்!
பொற்கொல்லர் பேச்சைக் கேட்டு ஏதோ அவசரத்தில் தவறான தீர்ப்பு வழங்கி விடுகிறான் பாண்டிய மன்னன், கோவலன் கொல்லப்படுகிறான். அரசவையில் கண்ணகி தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை நிரூபிக்கிறாள். தவறான தீர்ப்பு கூறி பாண்டிய குலத்திற்கே இழுக்கு ஏற்படுத்திவிட்டதை அறிந்த அரசன் அரசவையிலேயே உயிரை விடுகிறான்.
இவை எல்லாம் சரித்திரத்தில், இலக்கியத்தில் படித்த சம்பவங்கள். நம் வாழ்நாளிலேயே புதுக்கோட்டையில் ஒரு நீதிபதி இருந்தார். சாட்சியங்களின் அடிப்படையில் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கினார். குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டவன் குற்றவாளி அல்ல என்பது பின்னர் தெரியவருகிறது. தமது தவறான தீர்ப்பால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விட்டானேயென்று வருந்தினார் அந்த நீதிபதி. தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அது மட்டுமல்ல, வாழ்க்கையும் வெறுத்து துறவறம் பூண்டார். ஜட்ஜ் சுவாமிகள் என்று எல்லோராலும் மரியாதையோடு அழைக்கப்பட்டார். இன்று புதுக்கோட்டையில் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் மாதா ஸ்ரீ புவனேஸ்வரி ஆலயம் உருவாவதற்கு முன் அந்த ஸ்தலம் (அவதூத) ஸ்ரீ ஜட்ஜ் சுவாமிகளின் அதிஷ்டானமாக விளங்கிற்று. இங்குதான் ஸ்ரீ சுவாமிகள் சமாதி அடைந்தார். பின்னர் சத்குரு ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் தம்முடைய சொந்த வழிபாட்டுக்காக மகா புவனேஸ்வரியின் விக்கிரகம் ஒன்றை நிறுவி, ஆலயம் ஒன்றை எழுப்பினார். பின்பு இந்த ஆலயம் படிப்படியாக விரிவாக்கப்பட்டது.
ஆய கலைகள் அறுபத்துநான்கினையும்... என்பார் கம்பர். கலைகளை 64 ஆகக் கூறுவது பிரசித்தம். அது போல பாரத நாட்டில் வடக்கே காஷ்மீரில் தொடங்கி தெற்கே குமரி முனை வரை 64 சக்தி பீடங்கள் உள்ளதாகக் கணக்கெடுத்திருக்கிறார்கள். அவற்றுள் மிகச் சிறப்பாகக் கூறப்படுபவவை 36 என்றும், இவற்றில் மிக முக்கியமானவை ஒட்டியாண பீடம், ஜாலந்தர பீடம், காமராஜ பீடம் என்ற மூன்றும் என்பார்கள். பிரபஞ்சத்தை ஆண்டு வரும் பராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாகப் பேசப்படுகிறாள். மகா சரஸ்வதி ஞான ரூபம், மகாலட்சுமி கிரியா ரூபம். மகாகாளி இச்சாரூபம். ஆகவே லக்ஷ்மி சத், சரஸ்வதி சித், காளி ஆனந்தம் என்றும் இம்மூன்று பேரும் சேர்ந்து சச்சிதானந்த ரூபினியாக, சாமுண்டீஸ்வரி, புவனேஸ்வரியாக வழிபடப்படுகிறார்கள். காலமாக விரிந்தவள் காளி என்றும் இடமாக விரிந்தவள் புவனேஸ்வரி என்றும் சாஸ்திர வல்லுநர்கள் குறிப்பிடுவார்கள். கால வெள்ளத்தில் புவனங்களை, உலகங்களை மலரச் செய்பவள் புவனேஸ்வரி புவனங்களில் தோன்றி நிரம்பிய அனைத்துயிர்கட்கும் வடிவங்களும், பெயர்களும் அருளியவள் இவள். புவனங்களையும் புவனத்து உயிர்களையும் ஆளுபவள், ரட்சிப்பவள் புவனேஸ்வரி இவளையே பிரகிருதி அல்லது இயற்கை என்று குறிப்பிடுவார்கள். இயற்கை என்பது பலவாக அறிந்திருப்பதைப் பார்ப்பதன் மூலம் அதில் பிரம்மம் மறைவு பட்டிருப்பதை உணர முடிகிறது. எனவே இவள் மாயை என்றாலும் இவளைப் போற்றி வணங்கினால் மாயை நீங்கி மெய்ஞானம் உண்டாகும் என்பது உண்மை. காளி மூலாதாரக குண்டலினி புவனேஸ்வரி இதியாகாசத்தில் திகழும் ஞான வெளி அன்பர்களுக்கு என்று சிவந்த மேனியாக வந்த அன்னை இவள். திருமாலின் நாசி முனையில் புவனம் முழுவதையும் கக்கி நிலைநிறுத்திய அவதாரம் புவனேஸ்வரியின் வெளிப்பாடாகும்.
புதுக்கோட்டை நகருக்குப் பெருமை தேடித் தரும் கோயிலாக அமைந்துவிட்டது மாதா ஸ்ரீ புவனேஸ்வரியின் கோயில். நகரின் கிழக்கே இருக்கும் இக்கோயிலை அதிஷ்டானம் என்றே குறிப்பிடுகிறார்கள். நவஸாலபுரி என்ற புதுக்கோட்டை நகரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ மாதா புவனேஸ்வரி சந்நிதானத்தில் ஸ்ரீசக்ர பூரண மேரு 30.05.1966-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஸ்ரீ சக்கரத்தையே மேல் நோக்கி உருவகப்படுத்துவதே பூரணமேரு, மகாமேரு என்று கூறப்படும். ஸ்ரீபுவனேஸ்வரிக்கு நடப்பதுபோல இம்மகா மேருவுக்கும் அபிஷேக ஆராதனைகள் விதி முறைப்படி நடைபெற்று வருகின்றன. மாதா ஸ்ரீ புவனேஸ்வரி அபய வரதகரங்களுடன் அமர்ந்த கோலத்தில் பேரெழில் பொங்கக் காட்சி தருகிறாள்.
நான் இருக்குமிடத்தில் செல்வம் கொழிக்கும், என்ற வரிகளுடன் கூடிய மாதா ஸ்ரீ புவனேஸ்வரியின் திருஉருவப் படம் ஸ்ரீ புவனேஸ்வரி ஆலயத்தில் கிடைக்கிறது. இந்தப் படத்தைப் பூஜையில் வைத்து ஸ்ரீ புவனேஸ்வரி பஞ்சரத்ன ஸ்துதியை தினம் பாராயணம் செய்பவர் வீட்டில் செல்வம் செழித்து வளரும். ஞானம் கைகூடும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீ புவனேஸ்வரி ஸ்தோத்திரத்தில், “உதயத்பாதுஸஙஸ் ராபாம் பாலேந்து மகுடோஜ் வலாம் கோடி கந்தர்ப்ப லாவண்யாம் சிவமானஸவாஸி நீம்” என்றும் “துர்க்கா ஸரஸ்வதி லக்ஷ்மி ரூபிணீம் புவனாம் பிகாம் இச்சாகி ஞான க்ரியாசக்தி ரூபிணீம் இஷ்ட தாயிநீம்” என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. ஸ்ரீ புவனேஸ்வரியை வழிபடுவர்களுக்கு சரஸ்வதி கடாக்ஷம் லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படுவதுடன் உலகப் பற்று என்ற மாயை அகன்று மெய்ஞானம் ஏற்படும் என்பதும் ஆன்றோர் வாக்கு.
ஸ்ரீ புவனேஸ்வரியின் சந்நிதிக்கு நேர் எதிரில் அஷ்ட தச புஜ மகாலக்ஷ்மி, துர்க்காதேவியின் பெரிய திருஉருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ புவனேஸ்வரிக்கு தீப ஆராதனை நடத்தும்போது அதே சமயத்தில் இந்த அஷ்ட தசபுஜ மகா லக்ஷ்மிக்கும் தீப ஆராதனைகள் காட்டப்படுகின்றன. சுற்றுப் பிராகாரத்தில் பிரமாண்டமான ஸ்ரீ பஞ்சமுக ஆயு்சநேயர், ஸ்ரீ ஹோம்ப் (பஞ்சமுக) ஸ்ரீ விநாயகர் திரு உருவங்களும் நம்மை ஈர்க்கின்றன.
புதுக்கோட்டையில் ஸ்ரீ புவனேஸ்வரியைத் தரிசிக்கச் செல்பவர்கள் அருகில் உள்ள திருக்கோகர்ணம் குடைவரைக் கோயிலுக்கும் (மலையில் குடையப்பட்டது) சென்று அருள்மிகு பிரசுதாம்பாள் சமேத கோகர்ணேஸ்வரரையும் தரிச்த்து வரவேண்டும். காமதேனுப் பசு தன் காதுகளில் கங்கை நீரைக் கொண்டு வந்து இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டதாக வரலாறு பிரதோஷ வழிபாட்டிற்குப் பெயர்பெற்ற முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அற்புதமான சிற்பங்களும் கூரை மற்றும் சுவர் ஓவியங்களும் கண்ணையும் கருத்தையும் கவர்வனவாக உள்ளன. ஒரே கல்லில் அமைக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் இறைவன் தேவியோடு அமர்ந்து நாயன்மார்களுக்குக் காட்சி கொடுக்கும் நாயனார் உருவச் சிலையும் கல் கொடுங்கைகளும் பிரமிப்பூட்டுபவையாய் அமைந்துள்ளன.
திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலும் இத்தலத்தில் பிரசித்திபெற்ற கோயிலாகும். சமயபுரம் மாரியம்மனின் சகோதரி என்றழைக்க்ப்படும் அருள்மிகு முத்துமாரியம்மன், நாடி வரும் அன்பர்களுக்கு நோய் தீர்த்து அருள்புரிந்து வருகிறாள்.
- K. குருமூர்த்தி