2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - விருச்சிகம்
புகழ்ச்சிக்கு மயங்காத பண்புள்ளம் கொண்டு விளங்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
இதுவரை உங்களுக்கு மூன்றாமிடத்தில் சனி பகவான் அமர்ந்து தைரியத்தையும், மனவலிமையையும் தந்த சனி பகவான், இனி வரும் 29.03.2023 முதல் அர்தாஷ்டம சனியாக அமர்ந்து ராசியை பார்ப்பதும் உங்களின் ஆறாமிடத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்க்கிறார். இந்த காலங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பொது பலன் என்பதால் அவரவர்கள் சுய ஜாதகத்தில் சனி பலமாக இருக்கும் காலம், நற்பலன்களை பெற்று, நன்மை பெறச் செய்வார். யாருக்கு பணம், பொருள்கள் பிணையம் தரக்கூடாது.
இதனால் பல சிரமம் அடைய வேண்டிவரும். குடும்பத்தில் அமைதியாக இருந்து, பிரச்சனைகளுக்கு எது தீர்வு என்று ஆராய்ந்து அதன்படி நடக்க வேண்டும். பிள்ளைகளுக்கு கல்விக்கு தேவையான பொருள் ஈட்ட சில கஷ்டம் அடைய வேண்டி இருக்கும். வாகனங்களுக்கு அடிக்கடி பழுது வரும் என்பதால், அதனை வராமல் பார்த்துக் கொள்வதும், நிதானமாக பயணம் செய்து வருவதும் நல்லது. மேற்படிப்பு செல்லும் மாணவர்கள் தங்கும் இடங்களில் பொறுமையுடன் செயல்படுவதும், பிறரிடம் விட்டு கொடுத்து செல்லுவதும் நன்மை தரும்.
தொழில் செய்யுமிடத்தில் தனக்கு கொடுத்த வேலையை மட்டும் செய்து வருவது நல்லது. புதிய தொழில் துவங்க கூட்டாளிகளின் நம்பிக்கை உறுதி செய்த பின்பு கூட்டு தொழில் செய்வது நல்லது. ஒன்லைனில் அதிகமான முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். புண்ணிய யாத்திரை சென்று வருவது நல்லது. மூன்று முறை குரு பெயர்ச்சி வருவதால் குரு பார்வை பெறுமிடங்கள் மூலமாக பெரிய பாதிப்புகள் எதுவும் வராது. உங்களுக்கு பக்கபலம் உங்களின் ராசிநாதன் செவ்வாய் இருப்பது உங்களுக்கு ஊக்கம் தந்து உதவுவார்.
எதற்கும் தீர்வு வழிபாடு என்பதால் ஆன்மீக வழிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டு, ஏதாவது கோவிலுக்கு சிறு உதவிகளையும், உழவார பணிகள் செய்து வருவதன் மூலம் எல்லாவற்றை சரி செய்து கொள்ளலாம்.
பரிகாரம்:
சனி, ஞாயிறுகளில் ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபாடு செய்து வரவும். தயிர் அன்னம் நைவேத்தியம் வைத்து வணங்கி வர உங்களின் வாழ்வு வளமாக இருக்கும்.