வியாபாரம் தொழில் பெருக ஸ்ரீ ஆஞ்சநேய மந்திரம்!

வியாபாரம் தொழில் பெருக ஸ்ரீ ஆஞ்சநேய மந்திரம்!

ஆஞ்சநேயரின் சக்தி அளவிட முடியாத ஒன்றாகும். எல்லாக் காரியங்களும் இனிதாக நிறைவேறவும், எடுத்த காரியங்கள் மகத்தான வெற்றி பெறவும் ஆஞ்சநேயரின் அருள் வேண்டும்.
 
சகல சௌபாக்கியங்களையும் இவரை வணங்கித் துதிப்பதன் மூலம் பெற்று சிறப்புறலாம். இவருடைய அருள் மட்டும் நமக்குக் கிடைத்துவிட்டால் எண்ணுவது அனைத்தும் நிறைவேறும்.
 
“புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் சஹநுமத் ஸ்மரணாத்பவேத்”
 
என்ற மந்திரத்தின் மூலம் இவரை வணங்கி வழிபட்டு, இவர் புகழ்பாடும் மந்திரங்களை உச்சரித்து வருவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் அளவிடற்கரியது.
 
புத்திர் - அறிவு விருத்தியடையும்
பலம் - வலிமை ஓங்கும்
யசோ - புகழ் பெருகும்
தைர்யம் - நல்ல உறுதியான நெஞ்சம் பெறலாம்
நிர்ப்பயத்வம் - எதையும் எதிர்த்து நிற்கும் அஞ்சா நெஞ்சத்தைப் பெறலாம்.
அரோகதா - நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்
அஜாட்யம் - விழிப்புணர்வு கிடைக்கும்
வாக்படுத்வம் - எதையும் பேசிச் சமாளிக்கும் வாக்கு வன்மை கிடைக்கும்
 
சிறப்பான முறையில் வியாபாரம் செய்து பெருமளவில் செல்வம் பெறவும், நுட்பமான தொழில் புரிந்து பெரும் புகழ்பெறவும் மேற்குறிப்பிட்டவைகள் அனைத்தும் பயன்படும்.
 
அஞ்சநேயரை புதன் வியாழன், சனி ஆகிய கிழமைகளில் வழிபட்டு வருவது சிறப்பாகும்.
 
இவ்வாறு வழிபட்டு வரும்போது ஆஞ்சநேயரின் வால் துவங்கம் இடத்திலிருந்து வாலின் நுனி வரை சந்தனம், குங்குமம் கொண்டு பொட்டு வைத்து வணங்க வேண்டும். இவ்வாறு நாற்பத்தெட்டு தினங்கள் வழிபட்டு வர வேண்டும்.
 
வேறு எந்த மந்திரத்தையும்விட, “ஸ்ரீராம ஜெயராம, ஜெய ஜெய ராம” என்று உச்சரித்து வணங்குவதே பெரும் பயன் தருவதாகும்.
 
சித்திரை மாதத்தில் வரும் ஸ்ரீராமநவமியன்று வழிபடுவது மிகவும் சிறப்பாகும். எப்போதுமே ராமபிரானின் திருநாமத்தை உச்சரித்த வண்ணமிருப்பதில் ஆஞ்சநேயருக்கு அளவு கடந்த விருப்பம்.
 
“ராம ஸ்ரீராம சீதா ராமா
அருள் தந்து துயர்போக்கிக் காப்பாய் ராமா”
 
என்று உச்சரித்துக் கொண்டிருந்தால் போதும். ஆஞ்சநேயரின் அருள் குறைவறக் கிடைக்கும்.
 
நமது வேண்டுதல்களை எல்லாம் ஏற்று வெண்ணெய் போல உருகும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் கொண்டு வழிபடுவது பொருத்தமேயாகும்.
 
வியாபாரிகள் தாங்கள் கடைகளில் ஆஞ்சநேயரின் திருவுருவப் படத்தை வைத்து, வால் துவங்கும் இடத்திலிருந்து வாலின் முடிவு வரை நாற்பத்தெட்டு தினங்கள் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து வணங்கி வர வேண்டும்.
 
ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாகக் கருதப்படுவதால் இவ்வாறு சந்தனத்தாலும், குங்குமத்தாலும் பொட்டு வைத்து வணங்கி வந்தால் நவக்கிரகங்கள் அனைத்தையும் வழிபட்டு வருவதாக ஐதீகம் இதன்மூலம் வியாபாரம் பெருகும்.
 
மார்கழி மாதத்தில் மூலநட்சத்திரம் சேர்ந்து வரும் அமாவாசையன்று இவரை வணங்கிப் பூஜை செய்வது நன்மை தருவதாகும். இந்த நாளில்தான். ஆஞ்சநேயர் அவதரித்தார் என்பதால் இந்த நாள் விசேடமாகக் கருதப்படுகிறது.
 
ஒரு வேனை அமாவாசையும் மூல நட்சத்திரமும் சேர்ந்து வராவிட்டால் மார்கழி மாத அமாவாசையன்று முதல் பூஜையை ஆரம்பிக்கலாம். அல்லது புதன், வியாழன், சனி ஆகிய தினங்களில் பூஜை செய்து வரலாம்.
 
- ஆபஸ்தம்பன்