லால் கிதாப் பரிகாரங்கள்

லால் கிதாப் பரிகாரங்கள்

‘லால் கிதாப்’ - என்பது ஒரு பண்டையகாலத்து, மிகவும் சக்தி வாய்ந்த ஜோதிட பரிகார வழி முறையாகும். இந்த பரிகாரத்தின் பலனின் முடிவுகளை, அது செய்யப்படுகிற 45 நாட்களில், ஒவ்வொரு நாளும் உணரமுடியும். இது இராவணனால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஹோமங்கள் போன்ற மத சம்பிரதாயங்களை விரும்பாத இராவணன், தனது பிரஜைகளின் கஷ்டங்களைக் கண்டு, அவர்கள் செய்கின்ற பரிகார பூஜைகள் சாதாரணமானதாகவும், உடனடியாக நடத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என எண்ணினார். அதன் பலனாக இந்த எளிய முறை பரிகாரங்களை உருவாக்கினார் என்கிறார்கள்.
 

“லால் கிதாப்” பரிகாரங்களுக்கு 9 கிரகங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த முறையின் முக்கிய குறிக்கோளே பலன் சொல்வதைவிட, பரிகாரம் உரைப்பதுதான்.  ஏனெனில், கஷ்டங்களைவிட, கஷ்டத்துக்கு உரிய பரிகாரமே முக்கியம் எனக் கருதி பரிகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே, வரப்போகிற பலனைவிட, இப்போதைய கஷ்டங்கள் தீர நிச்சயமான, எளிமையான பரிகாரங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. 
 
உலக துன்பங்களை கழைவதற்கு முன், தனிமனிதனுக்கு உள்ள முன்னோர்களால் ஏற்பட்ட தோஷங்கள், இதர தோஷங்களுக்கான பரிகாரங்கள்  சொல்லப்பட்டுள்ளன. இத் தோஷங்கள் ஜாதகரால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டியவை ஆகும். ஒவ்வொருவரும், தங்கள் முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் இதுபோன்ற ருண பித்ரு எனப்படும் முன்னோர் செய்த பாவங்களுக்குப் பரிகாரங்கள் செய்யவேண்டும். தொழில் முன்னேற்றமோ, திருமணத்தடைகளோ, புத்திர பாக்கியம் இன்மையோ, பயணத்தடை, பண நஷ்டங்கள் என அனைத்து முன்னேற்றத் தடைகளுக்கும் உரிய பரிகாரங்கள் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன.  அவை நம்மால் செய்யப்பட்ட முன்வினையால் அல்லது நாம் செய்யாத, முன்னோர்களால் செய்யப்பட்ட பாவங்கள், அந்த குடும்பத்தில் பிறந்ததின் காரணமாக, இக்கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருக்கிறது. 
 
இதில் மாயமந்திரங்களோ, தந்திரங்களோ இல்லை. தாயித்தோ, எந்திரங்களோ, தெய்வ விக்ர பரிகாரங்களோ எதுவும் கிடையாது. அதில் சொல்லப்பட்டுள்ளவை, மிக எளிமையான, சுலபமான, வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே செய்யும் அளவுக்கு உள்ள பரிகாரகங்களே ஆகும்.
 
அதில், பொய் சொல்லாதே, கடவுளிடம் நம்பிக்கை வை, முழுமையான அர்ப்பணிப்புடன் தெய்வத்திடம் பக்தி செலுத்து ஆகிய சீரிய கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், மதுக் குடிக்காதே, மாமிசம் உண்ணாதே ( அசைவ பழக்கம் இருந்தாலன்றி ) கூட்டுக் குடும்பத்தில் வாழ முற்படு, மூக்கையும், காதுகளையும் கூர்மையாக வை, பெண் குழந்தைகளை வழிபடு, பெண்கள், விதவைகளுக்கு உரிய மரியாதை கொடு, இவர்களுக்கு வேண்டியதை தானமாகக் கொடு, எவரிடம் இருந்தும் இலவசமாக எதையும் பெற விரும்பாதே, பசுக்களுக்கு காக்கை மற்றும் நாய்க்கு உணவளித்துப் பேணு, பற்களை சுத்தமாக வைத்துக்கொள் என்றும், இது போன்ற, தற்கால உலக வாழ்க்கைக்குத் தேவையான எண்ணற்ற நல்ல புத்திமதிகளைச் சொல்கிறது.
 
லால்கிதாப்பின் பரிகாரங்கள் அனைத்தும் ஜாதகம் மற்றும் எம்முடைய கையிலுள்ள ரேகைகளை வைத்து எழுதப்படுவதாகும். உள்ளங்கையில் உள்ள ரேகைகள், மேடுகள், சதுரங்கள், விடுபட்ட வரிகள், விரல் மேடுகள் அனைத்தும், ஒரு கிரகத்தைக் குறிக்கின்றன. ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து அவற்றின் நிலைகளை வைத்து, சரியான முறையில் ஜாதகம் எழுதப் படவேண்டும். அதே சமயத்தில் , அதிகம் நேரத்தை எடுத்துக் கொள்வதும், மனம் ஒன்றி ஈடுபட வேண்டியதுமான கைரேகைக் கலையில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 
பிரபஞ்சத்தை ஆளும் ஈஸ்வரனின் கட்டளையை ஏற்று நடக்கும் கிரகங்கள், மனித வாழ்க்கையைக் கட்டுப்படுத்தக் கூடிய சக்தியைப் பெற்றுள்ளன. செவ்வாய் – பூமி சம்பந்தமானவற்றையும், சுக்கிரன் – பொருள், குரு – பக்தி மார்க்கம், புதன் – திறந்த மனம், பரந்த மனப்பான்மை, காடுகள், சனி – இருட்டு, இராகு – கேதுக்கள் சனியின் காரியதரிசிகளாகவும் செயல்படுகிறார்கள். இந்த கிரகங்களே நமது விதியை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. பூமியில் தங்களுக்கு உரிய பொருட்கள் மூலமாக, அனைத்தையும் மேற்பார்வை இடுபவர்களும் இவர்களே ஆகும்.
 
ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பதன் காரணமாக, அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் செய்த பாவங்கள், தோஷங்களாக ஒரு ஜாதகருக்கு, தற்காலிக விதியாக அமைந்து விடுகிறது. இந்த தோஷமானது, முற்பிறவியில் அவரால் செய்யப்படாத வினையாகக் கூட இருக்கலாம். இதை, ஜாதகத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். “நிச்சிய கர்மா” – எனப்படும் நிலையான விதி, இவரால் முன் ஜென்மத்தில் நிகழ்தப்பட்டதாகும். இதை எவராலும் மாற்றவோ, திருத்தவோ முடியாது.  ஒரு ஜாதகத்தில் இவற்றை ஆராயும் போது, விதிப்படி எவ்வகை வினைகள் செய்யப்பட்டுள்ளன, அதற்கு என்ன  பரிகாரம் செய்யலாம் என்பதைப் பரிந்துரைக்கலாம். இதை பரிசீலிக்கும் போது இம்முறையில், பாவங்களே பிரதான இடம் பெறுகின்றன, 
 
இந்த வகையில் முதன்முதலாக மேஷ ராசிக்காரர்கள் அதாவது மேஷ (லக்ன அல்லது ராசி) பாவங்கள் பின்பற்றவேண்டிய லால்கிதாப் பரிகாரங்கள் குறித்து பார்ப்போம்.
 
• எந்தப் பொருளையும் இலவசமாக வாங்காதீர்கள்.ஒரு சிறு தொகையாவது கொடுத்தே வாங்குங்கள் .
• சிகப்பு நிற கைகுட்டையைப் (கர்ச்சிப்) பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தைத் தரும்.
 
• பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும். பெண்களாகயிருந்தால், வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.
 
• ஸ்வீட் அல்லது மிட்டாய் செய்பவராகவோ அல்லது ஸ்வீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையிலோ வேலை செய்யக்கூடாது .இதனால் அதிர்ஷ்டம் கிடைக்காது.
 
• வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது.
 
• தாய்,குரு மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள்,ஞானிகளுக்கு முடிந்த உதவி , சேவை செய்தல் வேண்டும்.
 
• உறங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.அந்த நீரைக் காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு ஊற்றி வரவும்.
 
மேற்கண்ட எளிய பரிகாரங்களை மேஷ ராசிக்காரர்களும், மேஷ லக்னக் காரர்களும் பின்பற்றி வந்தால் அவர்கள் வாழ்வில் நன்மையும் நலமும் கிட்டும் என்கிறது லால்கிதாப்
 
- கைநாட்டு கைலாசம்