குஜராத்தின் பழைமைமிகு நாகநாதர் ஆலயம்!

குஜராத்தின் பழைமைமிகு நாகநாதர் ஆலயம்!

சிவபெருமானின் பன்னிரண்டு சோதிர்லிங்கங்களுள் ஒன்றான அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஸாம்நகர் மாவட்டத்தில் ஸாம்நகரில் அமைந்திருக்கிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயில், இன்றும் சிறப்புற ஆன்மீகச் சேவையாற்றி வருகிறது.
 
இவ்வாலயத்தின் கோபுரம் மிகவும் உயரமானதாகவும் வாழைப்பூ போன்று கூம்பு வடிவில் அமையப் பெற்றதாகவும் இருக்கின்றது. இந்த கோபுரத்தில் அற்புதமான மற்றும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. 
 
நான்கு பக்கங்களிலும் உயர்ந்த மதிற்சுவர்கள் அரண்கள் போல அமைந்திருக்க, நான்கு புறங்களிலும் தாராளமான இடம் பரந்து விரிந்து கிடக்கிறது. ஆலயத்தின் கீழ் மற்றும் வட திசைகளில் நுழைவு வாயில்கள் இருந்தாலும் வடதிசை வாயிலே பெரிதாகவும் உபயோகத்திலும் உள்ளது.
 
ஆலயக் கோபுரத்தின் கீழ் கர்ப்பக் கிரகத்தின் உள்ளே ஒரு மேடை மட்டுமே உள்ளது. கர்ப்பக் கிரகத்தின் இடப்பக்கம் மூலையில் மட்டும் ஒரு நான்கடி நீளம், நான்கடி அகலமுள்ள சுரங்கப் பாதை உள்ளது. அதன் வழியே சென்றால் பூமிக்கடியில் ஒரு சிறு அறையில் மூலவர் நாகநாதர் காட்சியளிக்கின்றார். 
 
அந்தச் சதுரமான துவாரத்தின் வழியே பக்தர்கள் குதித்துத்தான் இறங்க வேண்டும். மேலே ஏறும்போதும் தாவித்தான் ஏறி வரவேண்டும். குறுகிய வழி என்பதாலும், நெருக்கத்தின் காரணமாகவும், உள்ளே செல்வதும், மேலே ஏறி வருவதும் வயதான பக்தர்களுக்கு சற்று சிரமமாகவே இருக்கும்.
 
மூலவர் இருக்கின்ற பாதாள அறையில் பக்தர்கள் நிற்க முடியாது, உயரம் குறைவாக இருப்பதால் பக்தர்கள் தலையில் முட்டிக்கொள்ளும். பக்தர்கள் குனிந்து சென்று , மூலவரைச் சுற்றி அமர்ந்து தான் சாமியைத் தரிசிக்க வேண்டும். 
 
அளவில் சிறிதாக உள்ள மூலலிங்கத்தின் மீது வெள்ளியால் செய்யப்பட்ட முகப்படாம் கவசம் வைத்து வழிபடுகின்றனர். மூலஸ்தானத்தில் காற்றோட்ட வசதி கிடையாது என்பதால், பக்தர்கள் வசதி கருதி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களே ஒரு சமயத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.
 
தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற பக்தர்கள் நாகநாதருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.
 
நாகநாதம் என்றும் இத்திருக்கோயில் அமைந்துள்ள இடம் முன்பு பெரும் கூடாகவும் வனமாகவும் இருந்தது. 
 
முன்னொரு காலத்தில் இத்திருத்தலம் நாகநாதம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இதற்கு தாருகாவனம் என்றும் பெயர் வழங்கப்பட்டிருந்தது. இங்கு வாழ்ந்த ரிஷிகளும், முனிவர்களும், தம்முடைய மனைவிகளின் மாண்பினால் செருக்குடன் இருந்து சிவனை அவமரியாதை செய்து வந்தனர். இவர்களுக்கு, கர்வத்தை அகற்றி நல்வழி திருப்ப சிவனார் திருவுளம் கொண்டார்.
 
அவ்விதமே ஒரு யுக்தியின் மூலம் அவர்களை நல்வழிப்படுத்தி, சிவபெருமான் அவர்களுக்கு சோதிர்லிங்கமாக காட்சி கொடுத்தார். இக்காட்சியைக் கண்ணுற்ற ரிஷிகளும் முனிவர்களும் வந்து தம்மை ஆட்கொண்டது இறைவனே என்பதை உணர்ந்தார்கள்.
 
அதன்பின் தாருகாவனத்து முனிவர்களும் ரிஷிகளும் கர்வம் நீங்கிச் சிவனை வழிபட்டனர். 
 
நாகப்பாம்பின் புற்றுக்குள் நாகத்தின் குடையுடன் சிவன் காட்சி தந்ததனால் இத்தலத்து இறைவன் நாகநாதர் என்றும் தலத்தின் பெயர் நாகநாதம் எனவும் இறைவன் சோதி வடிவுடன் காட்சி கொடுத்ததால் லிங்கத்துக்கு சோதிர்லிங்கம் என்ற பெயரும் வழங்கலாயிற்று. இத்தலத்து இறைவி நாகேஸ்வரி என அழைக்கப்படுகின்றாள்.
 
பீம தீர்த்தம், கோடி தீர்த்தம் மற்றும் நாகதீர்த்தம் என்பன தலத் தீர்த்தங்களாக உள்ளன. விநாயகர், முருகன், நந்திதேவர், பஞ்சபாண்டவர்கள், தாருகாவனத்து முனிவர்கள், அவர்களது பத்தினிகள், பிட்சாடனர், மோகினி வடிவில் திருமால் ஆகியோர் பரிகார மூர்த்திகளாக உள்ளனர். 
 
- S.ஆகாஷ்