லிவர்மோரின் சிவ விஷ்ணு ஆலயம்!

லிவர்மோரின் சிவ விஷ்ணு ஆலயம்!

வெளிநாடுகளில் வாழும் இந்து சமயிகளுக்கு ஆன்மீக தேடலுக்கான விடையாக இருப்பது ஆலயங்கள் தான். வேலை மற்றும் தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் இருக்கும் இந்து சமயத்தை தழுவிய மக்கள் தாம் எங்கிருந்தாலும் நல்லதொரு ஆலயத்தை பல்வேறு ஆதரவான காரணங்களை முன்னிட்டு எழுப்புகின்றார்கள். தெய்வ வழிபாட்டுக்காகவும், கூட்டு வழிபாட்டிற்காகவும், பண்டிகை கொண்டாட்டங்களுக்காகவும் தனிபட்ட குடும்பங்களின் சமய வைபவங்களுக்காகவும் இந்த ஆலயங்கள் அளிக்கும் சேவைகள் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. ஒரு நாளில் தொழில் வியாபாரம் மற்றும் வேலை நிமித்தமாக மக்கள் எட்டு மணி நேரத்திலிருந்து பத்து மணி நேரம் வரை தொடர்ந்து உழைத்தாலும், தம்முடைய ஓய்வு நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் ஆலயத்திற்கு சென்று வழிபடுதலும் தியானத்தில் அமர்தலும் மிகுந்த மன அமைதியையும் ஆத்ம திருப்தியையும் தரவல்லதாகும். இவ்வகையான வழிபாடுகள் மனதிலே இருக்கின்ற குழப்பங்களை அகற்றி, எண்ணச் சிதறல்களை நிறுத்தி ஒரு தெளிவான சிந்தனைக்கு இட்டுச் செல்லும் என்பதே உண்மை. 

 
அமெரிக்காவின் லிவர்மோரில் அமைந்துள்ளது தான் பாரம்பரிய மிக்க இந்து சிவ விஷ்ணு ஆலயம். 1977-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டுமான பணிகள் தொடர்ந்து வெவ்வேறு மட்டங்களில் வெவ்வேறு ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறப்பட்டன. இதற்காக ஒரு ஆலயக் குழு 1977-ம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டது. 1980-ம் ஆண்டில் ஆலயத்திற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 1986-ஆம் ஆண்டில் தற்காலிகமாக ஒரு ஆலயம் அமைக்கப்பட்டது. இந்த ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான திரு.என்டி ராமராவ் அவர்களால் செய்யப்பட்டது. ஆலயத்தில் சிற்பங்கள் செதுக்குவதற்கும் சிலைகள் நிர்மாணிப்பதற்கும் இந்தியாவிலிருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆலயத்தின் கட்டுமான பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு 1986-ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் ஆலய கும்பபிசேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த ஆலயத்தில் அமையப் பெற்றுள்ள பொது மக்கள் கூடத்தை லிவர்மோரின் சிட்டி கவுன்சில்மேன் என்னும் அமைப்பு தொடங்கி வைத்தது. துவக்க விழாவின் போது இந்தியாவைச் சேர்ந்த கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் இசைக்குழுவின் இசை கச்சேரி இடம் பெற்றது. 
 
இதனைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டு ஆலயத்தின் 25-வது வருடாந்திர கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. 2010-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் ஆலய மகாகும்பாபிசேகமும் நடத்தப்பட்டது. 2011-ம் ஆண்டில் கனக துர்கா பிரார்த்தனை கூடம் முழுமையாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. ஆன்மீக சேவைகளுக்கும், கட்டிட கட்டுமான பணிகளுக்கும், அன்னதான சேவைகளுக்கும் லிவர்மோர் பகுதியிலுள்ள பக்தர்களால் தாராளமாக நன்கொடைகள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக ஆலயம் தொடர்பான அனைத்து பணிகளும் குறைவின்றி அந்தந்த சமயத்தில் செய்து முடிக்கப்பட்டன. தன்னார்வலர்களின் சேவைகள், ஆலயம் மிக சிறப்பாக அமைவதற்கும் அன்றாட பூஜை பணிகளுக்கும் மற்றும் இதர வைபவங்கள் தொடர்பான எல்லாவாற்றிற்கும் எப்போதும் பாராட்டும்படியாகவே இருந்துள்ளது என ஆலய நிர்வாக குழுவும் பக்தர்களும் தெரிவிக்கின்றார்கள். 
 
ஆலய பூஜைகளை அனுதினமும் குறைவின்றி மேற்கொள்வதற்கு பன்னிரண்டு அர்ச்சகர்கள் பணியில் இருக்கின்றார்கள். இந்த அர்ச்சகர்கள் இந்து பண்பாட்டு பண்புகளுடனும் ஆலய விதி முறைகளின் படியும் பணியாற்றுகின்றார்கள். இவர்கள் தங்கள் சேவை நேரங்களின் போது பக்தர்களிடம் மிகுந்த அன்புடனும் கனிவுடனும் நடந்து கொள்கின்றார்கள். அனுதினமும் பூஜைகள் முடிந்தவுடன், ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் இனிப்புகளும் சாத வகைகளும் பிரசாதங்களாக வழங்கப்படுகின்றன. இங்கு வழங்கும் இனிப்பு பிரசாதம் பெரும்பாலும் லட்டு வடிவத்திலேயே இருக்கின்றது, இந்த லட்டுகள் திருப்பதி லட்டை விட பெரிதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது. 
 
லிவர்மோரின் சிவ விஷ்ணு ஆலயமானது மிகப் பெரிய கம்பீரமான ராஜகோபுரத்துடன் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தைச் சுற்றிலும் உள்ள பிரகாரமும் ஆலய வளாகங்களும் மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆலயத்தின் பிரதான கட்டிடத்தில் கணேசர், சிவா, பார்வதி, கார்திகேயா, ஸ்ரீதேவி (லட்சுமி), விஷ்ணு, பூதேவி, ராதாகிருஷ்ணா, சீதா-ராமா, நவக்கிரகங்கள், அனுமன், காலபைரவர் மற்றும் துர்கா தேவி ஆகியோர் அமைந்துள்ளார்கள். இந்த ஆலயத்தில் வழிபாட்டிற்காக செல்லும் பக்தர்களுக்கு ஒரு அற்புதமான அதிர்வுடன் கூடிய பக்தி அனுபவம் கிடைக்கின்றது என்று சொல்லப்படுகின்றது, அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றார்கள். 
 
ஆலய பூஜை நேரங்கள், விசேட சிறப்பு பூஜைகள், சிறப்பு ஆராதனைகள், நிகழ்ச்சி நிரல்கள் முதலியவற்றை பற்றியதான முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள ஆலயத்திற்காக உருவாக்கப்பட்ட இணையத்தளத்தை பார்த்து பக்தர்கள் அறிந்து கொள்ளலாம். (livermoretemple.org/hints) ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாக்காலங்களில் கூடுதல் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமும் ஆலயத்தின் எதிர்புறத்திலேயே அமைந்துள்ளது கூடுதல் வசதியாகும். 
 
- அபிதா மணாளன்