அமெரிக்காவின் கிரேட்டர் சின்சின்னாட்டியின் சாய்பாபா ஆலயம்!

அமெரிக்காவின் கிரேட்டர் சின்சின்னாட்டியின் சாய்பாபா ஆலயம்!

வெளிநாடு வாழ் இந்துக்களின் அனைத்து ஆன்மீக தேவைகளையும் பூர்த்தி செய்வது நல்லதொரு இந்து ஆலயம் தான். பல்வேறு காரணங்களை முன்னிட்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்துக்கள் பெரும்பாலும் அந்த பகுதியில் ஒன்றிணைந்து சிறப்பானதொரு ஆலயத்தை எழுப்பிக் கொண்டு இறை வழிபாட்டால் இணைகின்றார்கள். இவ்வாறு எழுப்பப்படுகின்ற இந்து ஆலயங்கள் அப்பகுதியில் வாழ்கின்ற இந்துக்களின் கடவுள் வழிபாடு, பண்டிகை கால கொண்டாட்டங்கள், ஆலயத் திருவிழாக்கள், தனிப்பட்ட குடும்பங்களின் குடும்ப வைபவங்கள், ஆன்மீக சொற்பொழிவுகள், சங்கீத கச்சேரிகள், அன்னதானங்கள் ஆகிய அனைத்திற்கும் பேருதவியாய் அமைகின்றன. பொதுவாகவே தம்முடைய தாய்நாட்டை விட்டு அகன்று, பிரிதொரு நாட்டில் பணி நிமித்தம் வாழ்கின்றவர்களுக்கு இறைவழிபாடு மிகுந்த ஆத்ம திருப்தியைத் தர வல்லதாகும். இந்த அனுபவமானது தன்னுடைய சொந்த நாட்டில் பெருகின்ற ஆன்மீக உணர்வை போன்றே இருப்பதாக உணர்வார்கள். 

 
தற்போதைய மனிதர்களின் வாழ்க்கை மிகவும் பரபரப்பானதாகவும் ஆன்மீக பணிகளுக்கு இடம் தராததாகவும் இருந்து வருகின்றது. இருந்த போதிலும் பகவான் சாய்பாபா கூறியதைப் போல் பரபரப்பான வாழ்க்கைக்கும் சுவைக்கப்படாத ஆன்மீக உணர்வுகளுக்கும் இடையே இருக்கின்ற தூரத்தை நாம் பக்தி என்னும் பாலத்தின் மூலமாக குறைத்தே ஆக வேண்டும். அமெரிக்காவின் கிரேட்டர் சின்சின்னாட்டியில் வசித்து வரும் இந்து பெருமக்கள் சாய் பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பகவான் சாய்பாபவிற்கு கிரேட்டர் சின்சின்னாட்டியில் சிறப்பானதொரு ஆலயத்தை எழுப்பிட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். இவர்கள் அனைவரும், அதுவரையிலும் சிறு சிறு பக்தி குழுமங்களாக செயல்பட்டு சத்சங்கங்களாக இருந்து ஸ்ரீடி சாய்பஜன், சாய் சத்சரித்திர பாராயணம், சக்திசாய் பஜன் குழுக்கள் ஆகியவற்றின் மூலமாக பகவான் ஸ்ரீடி சத்யா சாய்பாபாவை பாடி போற்றி துதித்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் விரும்பியதைப் போன்றே, ஸ்ரீடி சத்யசாய்பாபாவின் திருவருளால் எல்லா பக்தர்களையும் ஒன்றிணைக்கும் படியான ஒரு அற்புதமான சாய்பாபா ஆலயம் சின்சின்னாட்டியில் எழுப்பப்பட்டது. 
 
சர்வதர்மங்களின்படி இங்கு எல்லோரும் ஒன்றிணைந்து பகவான் சாய்பாபாவின் கருணையை எதிர்நோக்கி அவரவர் விரும்பியபடி இந்த ஆலயத்தில் வணங்கும் வசதியை பெற்றார்கள். இங்கு பக்தர்களின் பக்தியும் ஈடுபாடும் ஆலயத்தின் தூண்களாய் விளங்குவதை நாம் காண முடிகின்றது. இங்கு நடைபெறுகின்ற பக்தி பெருக்கோடு கூடிய பஜனைகள் வெறும் சடங்குகளாகவும், கட்டாய கைங்கரியங்களாகவும் மட்டும் இருப்பதில்லை. கிரேட்டர் சின்சின்னாட்டியின் ஸ்ரீ சாய்பாபா ஆலயமானது எந்தவித லாப நோக்கமுமின்றி பக்த பெருந்தகைகளின் ஆன்மீக தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்கின்ற விதத்தில் சிறந்த பக்தி மார்க்கத்தில் இயங்கி கொண்டிருக்கின்றது. இந்த ஆலயத்தின் பிரதான நோக்கமானது சின்சின்னாட்டியில் வசிக்கின்ற அனைத்து பக்தர்களையும் ஒன்றிணைத்து வழிபாட்டில் ஓர்மையுடன் இணைத்துக் கொள்வதேயாகும். இதனை தொடர்ந்து கிரேட்டர் சின்சின்னாட்டி சாய் பக்தியின் மையமாக கடந்த சில காலமாக திகழ்கின்றது. சாய் பக்தர்களை ஒருங்கிணைப்பு செய்வதற்கும், பகவான் ஸ்ரீடி சாய்பாபாவிற்கு ஸ்தோத்திரங்களை சமர்ப்பிதற்கும், குரு கிருபையை பெறுவதற்கும் சின்சின்னாட்டியின் ஸ்ரீடி சாய்பாபா ஆலயம் ஒரு மிகச் சிறந்த வரப்பிரசாதமாகும்.
 
அவ்வப்போதைய சூழ்நிலைகளை உத்தேசித்து இங்குள்ள ஆலயமானது சாய் பக்தர்களின் ஆன்மீக, மத, கல்வி மற்றும் இதர தேவைகளை வெவ்வேறு சந்தர்பங்களில் பூர்த்தி செய்து வைக்கின்றது. எந்த நம்பிக்கையைச் சார்ந்தவர்களாக இருந்த போதிலும் அவர்களுடைய பக்தி வழிபாட்டிற்கு ஊக்கம் அளிக்கின்ற வகையில் இந்த ஆலயத்தில் ஒன்று கூடி ஆன்மீக உணர்வுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே ஆலய நிர்வாகத்தின் பேரவா ஆகும். மொத்தத்தில், சின்சின்னாட்டியில் ஸ்ரீடி சாய்பாபா ஆலயம் இப்பகுதி மக்களுக்கு கல்வி, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திற்கு ஒரு மிகச் சிறந்த வழிகாட்டு அமைப்பாக பெருமையுடன் விளங்குகின்றது.
 
- அபிதா மணாளன்