தென்மதுரை மீனாளின் திருக்கல்யாணம்!

தென்மதுரை மீனாளின் திருக்கல்யாணம்!

புண்ணிய பூமியாம் மதுரையில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் மாதந்தோறும் ஏதாவது ஒரு  திருவிழா நடந்து கொண்டேயிருக்கும். ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்ற திருத்தலம் மதுரை போல் வேறு எங்கும் காணக்கிடைக்காத ஒன்றாகும். எனவேதான் பக்தர்கள் மதுரையை “திருவிழா நகரம்” என்றே அழைக்கிறார்கள். 

 
இத்திருவிழாக்களில் மிகவும் முக்கியத்துவம் வாயந்தது உலக அன்னையாகிய மதுரை மீனாட்சிக்கும் லோகநாதளாகிய சொக்கநாதப் பெருமானுக்கும் நடைபெறுகின்ற மீனாட்சி திருக்கல்யாணமேயாகும். இந்து பெருமக்களை பொருத்தமட்டில் மீனாட்சி திருக்கல்யாணமே தெய்வத் திருமணங்களில் முதன்மையானதாகக் கொண்டாடப்படுகின்றது.
 
தெய்வீகப் பேறுபெற்ற மதுரையம்பதியில், சித்திரை மாதத்தில் நடக்கின்ற இத்திருக்கல்யாணம் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. உலகில் எந்த மூலையில் வசித்து வந்தாலும் உலக அம்மைக்கும் அப்பருக்கும நடைபெறுகின்ற திருக்கல்யாணத்தைக் கண்டு புண்ணியம் பெறமாட்டோமா என்று மனதோடு ஏங்குகின்ற இந்துக்கள் கோடானு கோடிப்பேர் இருப்பார்கள் என்பது திண்ணம். 
 
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமானது, மீனாட்சி அம்மன் பட்டப்பிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாணம், திருத்தேர் உலா எனப் பல நாட்களாக ஒரு அற்புதமான திருவிழாவிற் குண்டான அடையாளங்களுடன் நடைபெறும் ஒன்றாகும்.
 
நான்மாடக் கூடலாகிய மதுரையில் வருடாவருடம் இந்தத் தெய்வீகத் திருமணத்தைக் கண்குளிரக் கண்டு வாழுகின்ற மதுரைப் பெருமக்கள் பாக்கியம் பெற்ற புண்ணியர்கள் என்றால் அது மிகையாது. 
 
மதுரையை ஆண்ட அரசன் மலையத்துவசபாண்டியனுக்கும், அரசியார் காஞ்சன மாலைக்கும் பல காலமாக குழந்தைப்பாக்கியம் கிடைக்கப் பெறாதிருந்தது. அரச குடும்பத்தின் இந்தக் குறை நீங்குவதற்காக, ராஜ பிரதானிகளின் ஆலோசனைகளின்படி, புத்திர காமேஷ்டியாகம் நடத்தப்பட்டது. அப்பொழுது உமா தேவியார், மூன்று தனங்களையுடைய ஒரு அழகிய பெண் குழந்தையாக வேள்விக் குண்டத்தில் தோன்றினாள். 
 
குழந்தையின் இவ்விதத் தோற்றத்தைக் கண்ட அரசன் மிகவும் மனம் வருந்தினான். அந்த சமயத்தில் அசரீரி ஒன்று ஒலித்து “இந்தக் குழந்தைக்குக் கணவன் வருகின்ற காலத்து முன்றாவது தனம் தானாகவே மறைந்துவிடும்” எனத் தெரிவித்தது. 
 
தெய்வ கட்டளைப்படி அந்தக் குழந்தைக்கு ‘தடாதகை’ என்று பெயர் சூட்டப்பட்டு மிகுந்த கனிவுடன் போற்றி வளர்க்கப்பட்டது. குழந்தை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் நேரத்திலேயே வில், அம்பு, வாள் முதலிய போர்க்கலைகளையும், மிகச்சிறந்த கல்வியையும் கற்றுத் தேர்ந்தது. 
 
பின்பு மலையத்துவச பாண்டியன் இயற்கை எய்திய பின்பு, தடாதகை அரச பரிபாலனத்தை ஏற்று நீதிநெறிமுறைகள் வழுவாதபடி செங்கொல் செலுத்தினாள். கன்னியாக இருந்த தடாதகை ஆட்சி செய்ததால் மதுரை ‘கன்னிநாடு’ எனப்பெயர் பெறலாயிற்று. 
 
தடாதகை திருமணப்பருவத்தை அடைந்தாள். நான்குவகைப் படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக் விஜயங்கள் மேற்கொண்டு பல இடங்களையும் வென்றாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து, சிவக்கனங்களுடன் சிவபெருமாளையும் கண்டாள். கண்ட மறுகணமே அவளது மூன்று தனங்களில் ஒன்று தானாகவே மறைந்து போய்விட்டது, தடாதகை நாணம் கொண்டு நெகிழ்தாள். முன் அறிவித்தபடி சிவபெருமானே தனக்குக் கணவராக வரப்போகிறவர் என்பது புலனாயிற்று. 
 
மதுரையின் வீதிகளும், வீடுகளும் அலங்கரிக்கப்பட்டன. திருமால் முதலிய தேவர்கள் அனைவரும் புண்ணிய மதுரை வந்திறங்கினர். கண்கள் செய்த பாக்கியமே இத்திவ்யத் திருமணத்தைக் காணக் கிடைத்து என தெய்வங்களும், தேவர்களும், மக்களும் ஒரே முகமாய் எண்ணினார்கள்.
 
திருமணத்திற்குரிய நல்லவேளையில் முரசங்கள் ஒலித்தன, சங்குகள் முழங்கின. என்னாட்டவர்க்கும் இறைவனாகிய சொக்கநாதருக்குப் பக்கத்தில் தடாதகை மணமகளாய் வீற்றிருந்தது கற்பகத்தருவில் மலர்ந்த பூங்கொடிபோல் இருந்தது. மேலும் தெய்விகத் திருக்கல்யாணக் கோலத்தில் அமர்ந்திருந்த மணமக்களின் காட்சி, பாலும் சுவையும், மலரும் மனமும், மணியும் ஒலியும் போல் அமைந்திருந்து, காட்சிகளுக்கெல்லாம் காட்சியாய், அழகுக்கெல்லாம் அழகாய் காணப்பட்டத்தில் வியப்பேதுமில்லை. 
 
திருமண இனிதே நிறைவேறியது. பிரம்மதேவன் உடனிருந்து திருமணத்தை நடத்தினான். மணமகனாகிய சிவபெருமாள் திருமங்கல நாளை பிராட்டியாருக்கு சூட்டினார். தடாதகைப் பிராட்டியே மதுரையில் மீனாட்சி அம்மையாக வீற்றிருந்து உலக மக்களை என்றென்றும் இரட்சிக்கின்றாள்.
 
- அபிதா மணாளன்