வேதபண்டிதராய் பரிணமித்த மகரிஷி ஜரத்காரு!

வேதபண்டிதராய் பரிணமித்த மகரிஷி ஜரத்காரு!

புராண காலத்தில் வாழ்ந்திருந்த முனிவர்களும் ரிஷி புங்கவர்களும் வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் நன்கு கற்றுணர்ந்து மனித சமுதாயத்திற்கு அரும்பணியாற்றி உள்ளார்கள். மூப்பு, பிணி, இறப்பு முதலியவற்றையும் கடந்து பல்லாண்டு காலம் பூமியில் வாழ்ந்து, தம்முடைய வாழ்நாளில் ஏதேனும் செயற்கரிய காரியங்களை நிகழ்த்தி புராண வரலாறுகளில் நிலையான இடங்களை பிடித்த மகரிஷிகள் பலர் உண்டு. இவர்களில் பலர் தர்ம நியதிகளை தாம் கற்றறிந்த வேதசாரங்கள் மற்றும் சாஸ்திரங்கள் முதலியவற்றின் அடிப்படையில் மக்களுக்கும் மன்னர்களுக்கும் எடுத்து இயம்பி சமுதாயம் குறைவின்றி வாழ வழி வகுத்தார்கள். சில மகரிஷிகளின் வாழ்க்கை வரலாறுகள் வினோதமான நிகழ்வுகளை கொண்டதாக இருந்த போதிலும், இறுதியில் அவர்களின் வாழ்வே ஒரு வரலாற்று பெட்டகமாய் அமைந்து வழிவழியாய் வரும் சந்ததியருக்கு நல்வழி காட்டுவதாய் அமைந்தன. 

 
புராண காலத்து ரிஷி வரலாறுகளில் ஜரத்காரு மகரிஷியின் வரலாறு மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது. பிரம்மச்சரியத்தை மிகவும் கடுமையாக கடைப்பிடித்து தவசீலராய் விளங்கிய ஜரத்காரு மகரிஷி தம்முடைய மூதாதையர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக சுவர்க்கத்தை அடையாமல் நரகத்தையும் முழுமையாக அடையாமல் நடுவில் பேரவஸ்தையில் சிக்கி தவித்து கொண்டிருந்தார்கள். ஒரு முறை ஜரத்காரு தன்னுடைய நீண்ட பயணத்தின் நடுவில், ஓரிடத்தில் அவருடைய மூதாதையர்கள் தலைகீழாய் தொங்க விடப்பட்டிருப்பதை கண்டார். இவர்களை புல் கயிறு ஒன்று இறுக்கமாக தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. அவர்களின் தலை ஒரு துவாரத்தில் நுழைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர்களை எலிகள் கடித்து உயிருடன் சித்திரவதைப்படுத்தும் நிலையை ரிஷி ஜரத்காரு கண்டு மனம் பதைத்தார். 
 
இவர்கள் அனைவரும் விமோசனம் பெற்று சுவர்க்கத்தை அடைய வேண்டுமாயின், இவர்கள் வழிவந்த மகரிஷி ஜரத்காரு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது சாபவிமோசனமாக இருந்தது. வழிப்பயணத்தில் சென்று கொண்டிருந்த ஜரத்காருவை கண்ட அவரின் மூதாதையர்கள் அவரை பழித்துக் கூறினார்கள். “உன்னுடைய கடுமையான பிரம்மச்சரிய விரதம் எங்களுடைய தொடர் துன்பத்திற்கு அடி கோலி நிற்கின்றது” என்று உறக்க கூவி உடனடியாக ஜரத்காருவை திருமண வாழ்க்கையில் நுழையும்படி கேட்டுக் கொண்டார்கள். 
 
இத்தனை பேர் சுவர்க்கத்தையும் அடைய முடியாமல், முழுவதுமாக நரகத்திற்கும் செல்ல முடியாமல் நடுவில் துயரத்தில் சிக்கித் தவிப்பதைப் பார்த்த பின்பும் பிரம்மச்சரியம் உனக்கு அவசியம் தானா என்று அவர்கள் ஏசினார்கள். பிராமண சமூகமான யயவாராஸ் இனத்தையே ஜரத்காருவாகிய நீ இழிவுப்படுத்தி விட்டாய் எனக் கூறி கடைசியாக மூதாதையர்கள் அனைவரும் ஒரே குரலில் ஜரத்காரு மகரிஷியிடம் திருமணம் செய்து குழந்தை பாக்கியம் பெற்றிட வேண்டிக் கொண்டார்கள். இவர்களின் வேண்டுகோளை முதலில் ஏற்க மறுத்த ஜரத்காரு, பின்னர் அவர்களின் ஒட்டு மொத்த நன்மையை கருத்தில் கொண்டு அவர்களை கடைத்தேற்ற வேண்டும் என்ற கருணை உள்ளத்தோடு தம்முடைய பிரம்மச்சரிய விரதத்தை விட்டு கொடுத்து திருமண வாழ்வில் ஈடுபட ஒத்துக் கொண்டார்.  
 
மகரிஷி ஜரத்காருவின் வாழ்க்கை பற்றிய விபரங்கள் மகாபாரதத்தில் அஸ்திகா மற்றும் மானசா தொடர்பான விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் தேவி பாகவத புராணம் மற்றும் பிரம்ம வைவர்த்த புராணம் ஆகியவற்றில் விளக்கப்பட்டுள்ளன. அஸ்திகா பற்றிய விபரங்கள் இரண்டு முறை அஸ்திகபர்வா என்னும் புராணத்தில் முதல் பகுதியில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இந்து இதிகாசமான மகாபாரத்தில் ஜரத்காரு யயவர பிராமண குலத்தில் பிறந்த கடைசி வம்சாளி வாரிசு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மகாபாரதத்திலேயே ஜரத்காரு என்னும் பெயருக்கு உண்டான விளக்கமாக ஜரா என்றால் உபயோகித்தல் அல்லது பயன்படுத்துதல் என்றும் மற்றும் காரு என்றால் மிகப் பருமனான என்றும் பொருள் தரப்படுகின்றன. மகரிஷி ஜரத்காரு முதலில் மிகப் பெரிய உடலை கொண்டிருந்தார். பின்னர் அவருடைய கடுமையான தவ வலிமையாலும் ஆஸ்திக அனுசரிப்புகளினாலும் தம்முடைய உடலை பெரிதும் சுருக்கிக் கொண்டார். ஆனால் இவருடைய தவ வலிமையானது பிரஜாபதியைப் போன்று மிகவும் உறுதியானதாக இருந்தது. பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதை இவர் தமது வாழ்நாளில் லட்சியமாகவே கொண்டிருந்தார். வேதங்களையும் வேத சாரங்களையும் நன்கு கற்றறிந்து அதன் படி நடக்கவும் செய்தார் மகரிஷி ஜரத்காரு. 
 
இவர் தம்முடைய திருமணத்திற்கு இசைவு தெரிவித்த போதிலும், சில நிபந்தனைகளை விதிக்கவும் செய்தார். அதாவது இவரை மணந்து கொள்ளும் பெண் தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் மணக்க வேண்டும், அப்பெண்ணை சார்ந்த குடும்பத்தினர் எனக்கு அவளை தானமாக ஈந்திடல் வேண்டும், என்னை சார்ந்து அவள் வாழவும் கூடாது, நான் அவளுக்கு எவ்வித ஆதரவும் தர மாட்டேன். இந்த நிபந்தனைகளை விதித்த பின்பு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு தொடங்கலானார். 
 
நாகமாதா கத்ருவின் சாபத்திலிருந்து விடுதலை பெற தனது தங்கையாகிய மானசாவை மகரிஷி ஜரத்காருவிற்கு திருமணம் முடித்து கொடுக்க நாகங்களின் தலைவரான வாசுகி முடிவு செய்து வைத்திருந்தார். பிரம்மதேவரின் ஆலோசனைப்படி வாசுகி தன்னுடைய தங்கை மானசாவை மணமுடித்து கொடுக்க தயாராக காத்து கொண்டிருந்த போது அங்கு ஜரத்காரு பிரசன்னம் ஆகின்றார். ஆனாலும் மானசாவை மணப்பதற்கு முன்பாக ஜரத்காரு, தன்னுடைய மனைவி எந்த நேரத்திலும் தன்னை மனசஞ்சலப்படுத்தக் கூடாது என தெரிவிக்கின்றார். அப்படிச் செய்தால் உடன் அவளை விட்டு பிரிய நேரிடும் என எச்சரிக்கின்றார். ஒரு முறை தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக உறவாடிய பின், ஜரத்காரு மகரிஷி தன் மனைவியின் மடியில் படுத்தப்படி அயர்ந்து உறங்கி விட்டார். 
 
மாலை நேரம் வந்த பின்பும் மகரிஷி சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்கின்ற உணர்வில் மிகுந்த யோசனைக்கு பின்பு தன் கணவராகிய ஜரத்காருவை மானசா எழுப்புகின்றாள். இதில் மிகுந்த கோபமுற்ற ஜரத்காரு தான் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாகக் கருதி தன் மனைவியை விட்டு பிரிய முடிவு செய்கின்றார். மனைவி எவ்வளவோ மன்றாடியும் தன் நியாயத்தை எடுத்துச் சொல்லியும் மகரிஷி ஏற்றுக் கொள்ளவில்லை. சூரிய கடவுள் இந்த தருணத்தில் மகரிஷியை கேட்டுக் கொண்ட பின்பும் தன் மனைவியை விட்டு பிரியும் எண்ணத்தில் மகரிஷி எந்த மாற்றமும் கொள்ளவில்லை. 
 
தனது தவ வலிமையின் மீதுள்ள நம்பிக்கையால், நான் சந்தியாவந்தனம் செய்து முடிப்பதற்கு முன்பாக சூரியன் எப்படி மறைவான் என்று மனைவியை கேள்வி கேட்கும் தருணம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. இப்படிப்பட்ட வல்லமை பொருந்திய மகரிஷியும் பெண்ணின் நல்லாள் ஆகிய மானசாவும் இணைந்து இல்லறம் நடத்த கொடுப்பினை இல்லாது போனது விதியின் வல்லாமையையே உணர்த்துவதாக அமைகின்றது. 
 
மகரிஷி ஜரத்காரு வேதவிற்பனராக தான் சென்ற இடத்தில் எல்லாம் வேத பாடங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி நல்வழிபடுத்துகின்றார். பிரம்மச்சரியத்தை துறந்து இவர் செய்த தியாகத்தால் இவரது மூதாதையார்கள் சுவர்க்கம் அடைந்தார்கள். தன் மனைவியை விட்டு பிரிந்து பின்பு பல காலம் பூமியில் வாழ்ந்து ஜரத்காருவும் சுவர்க்கம் அடைந்தார் என மகாபாரதம் தெரிவிக்கின்றது. 
 
- அபிநந்தன்