ஆலய ராஜகோபுரம்!

ஆலய ராஜகோபுரம்!

எந்த ஊருக்குள் நாம் நுழைந்தாலும் எங்கே இருந்து பார்த்தாலும் ஆலய கோபுரம் உயர்ந்து நின்று நமக்கு காட்சி தரும். கோயில் கோபுரத்துக்கு எதிரில் நாம் நின்று கொண்டு கோபுர உச்சியை அணண்ாந்து பார்த்தால் நமக்கே பிரமிப்பும் வியப்பும் ஏற்படும்.
 
இறைவனான பரமாத்மா எங்கும் நிறைந்து யாவரும் காணும்படி இருக்கிறார். அவருக்கு எதிரே நாம் மிகவும் சிறியவர்கள் என்ற அடக்க உணர்வு ஏற்படும். பணிவு தோன்றும். அப்போது நம்முடைய ஆணவம் எல்லாம் ஒரு கணத்தில் அடங்கிவிடும்.
 
இறைவனின் ஸ்தூல வடிவமே கோபுரம். ஆகவே இறைவன் நாம் செய்யும் செயல்கள் யாவற்றையும் கோபுர வடிவில் இருந்து கொண்டு கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வு சாதாரணமான பாமரனுக்கும் உண்டாகி விடும். ஆகவே மக்கள் தீயசெயல்களில் ஈடுபட அஞ்சுவர் எனவே அத்தகைய தீய செயல்கள் குறையும்.
 
கோயிலின் நான்கு வாசல்களிலும் கோபுரங்கள் இருக்கும். பிரதான வாயிலில் எழுப்பப்ட்டுள்ள கோபுரத்தை ராஜகோபுரம் என்பர்.
 
அரசனால் கட்டப்பட்ட காரணத்தால் இதற்கு ராஜகோபுரம் என்ற பெயர் அல்ல. கோபுரங்கள் பல இருந்தாலும் கோயிலின் ப்ரதான வாயிலில் உள்ள கோபுரம் மற்ற கோபுரங்களுக்கு ராஜாவாகும். அதனாலேயே ராஜகோபுரம் என்ற பெயர்.
 
மற்ற எத்தனையோ தமிழ்ச் சொற்களைப் போகவே கோபுரம் என்ற சொல்லும் ஸம்ஸ்க்ருதச் சொல்லே.
 
இந்தச் சொல் கோ என்ற மூலதாதுவிலிருந்து பிறந்துள்ளது. எந்த ஒரு இடமாக இருந்தாலும் அதாவது ஒரு நகரமோ, மன்னன் வாழும் மாளிகையோ அல்லது இறைவன் உறையும் திருக்கோயிலோ அதன் நுழைவாயிலில் கட்டப்பெறும் உயர்நிலைக் கட்டிட அமைப்பிற்கு கோபுரம் என்பதே பெயராகும்.
 
தமிழிலக்கியங்களில் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பெருங்கதையில்தான் இந்தச் சொல் முதன்முதலாக எடுத்தாளப்பட்டுள்ளது. அதன்பின்னர் வந்த இலக்கியங்களில் பரவலாக இச்சொல் நுழைவாயில் உயர்நிலை கட்டுமானத்தைக் குறிப்பதாக பயன்படுத்தப் பட்டுள்ளது.
 
Entrance Arch என்பதாக வெறும் வளைவு மட்டுமே கட்டுவதில் தொடங்கி பின்னர் 13 நிலைகள் கொண்ட இன்று நாம் காணும் கோபுரங்களாக மெல்ல மெல்ல இக்கட்டிட அமைப்பு வளர்ந்துள்ளது என்பதே வரலாற்று உண்மை.
 
கோபுரக் கட்டுமானம் உறுதித்தன்மை, உயரம், அலங்காரம் என்ற மூன்று அடிப்படைக் கூறுகளைக் கொண்டு வளர்ந்துள்ளது.
 
ப்ரகாசத்துடன் விளங்குவது எதுவோ, ப்ரகாசப் படுத்துவது எதுவோ அதுவே ராஜம் எனப்படும். கோபுரம் என்ற சொல்லுக்கு அண்டகோளகை எனப்படும். ப்ரபஞ்சத்தின் கூறுகள் அனைத்தையும் தன் வடிவத்தில் கொண்டிருப்பது என்ற அர்த்தமும் உண்டு. (கோ - கோளகை, புரம் - வடிவம்).
 
ப்ரபஞ்சக் கூறுகள், ப்ரபஞ்ச சக்திகள்  ஆகிய அனைத்தையும் தன் வடிவத்தால் புலப்படுத்துவதாக உள்ள ப்ரகாசத்துடன் விளங்குவதாகவும், சுற்றிலும் உள்ள இடங்களைப் பிரகாசப்படுத்துவதாகவும் உள்ளது எதுவோ அது ராஜகோபுரம். இது விராட கோபுரம் என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.
 
சிவாலயங்களின் ராஜகோபுரத்தை ஸ்தூல லிங்கம் எனவம், கருவறையில் எழுந்தருளியுள்ள சிவலிங்கத்தை ஸுக்ஷும லிங்கம் எனவும் குறிப்பிடும் மரபும் உண்டு.
 
ராஜகோபுரம் எங்ஙனம் அமைந்துள்ளது?
 
கோபுரத்தின் அடிப்பகுதியில் சங்கு முழங்குவது போல் தோன்றும் பூத வடிவங்கள். இவற்றின் வயிறுகளும் குடங்கள் போன்றுப் பெருத்துக் காணப்படும். இதே வகைத் தோற்றங்கள் கோபுரத்தின் மேல் நிலைகளிலும், இடைப்பகுதிகளிலும் கூட காணப்படும். இந்த வடிவங்கள் எதற்காக அமைக்கப்பட்டுள்ளன?
 
ப்ரபஞ்சம் முழுவதும் வியாபித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் காற்று மண்டலத்தை நாற்பத்து ஒன்பது விதமாகப் பிரித்துக் கூறியிருக்கிறார்கள். ஆகமநூல் வல்வார்.
 
கோள்களையும், லக்ஷக்கணக்கான நக்ஷத்திரங்களைக் கொண்டு ஒளி மண்டலங்களையும் (Galaxies) இயக்கிக் கொண்டிருக்கும் காற்றுகளையும் புலப்படுத்துபவையே ராஜகோபுரங்களில் காணப்படும் சங்கு தாங்கிய பேழை வயிற்றுப் பூதங்கள்.
 
காற்று இருக்கும் இடத்தில் எல்லா ஒலியும் உண்டு. காற்று - ஒலி இணைப்பைப் பிரிக்க முடியாது. பிரபஞ்சத்தின் இயற்கை அப்படி.
 
பூதங்கள் ஏந்திக் கொண்டிருக்கும் சங்கு, ப்ரபஞ்சம் எங்கும் வியாபித்துள்ள ஒலிகளையும், பூதங்களின் பெருத்த வயிறு ப்ரபஞ்சம் எங்கும் நிறைந்துள்ள காற்றுகளையும் புலப்படுத்தபவவையாகும்.
 
கோபுரத்தின் கீழ் நிலைகளில் காணப்படும் பல்வேறு வடிவங்கள் ஓங்காரத்தின் பேதங்களையும், வேதங்கள், வேதசாகைகள், ஆகமங்கள், உப ஆகமங்கள் முதலானவற்றையும் ஸாலோகம் எனும் முக்திநிலையைப் பெற்றுள்ள ரிஷிகள், அடியார்கள் ஆகியோர்களையும் புலப்படுத்துபவை ஆகும்.
 
- ஆர்.பி.வி.எஸ். மணியன்