ராம நாமத்தின் மகிமை!

ராம நாமத்தின் மகிமை!

“ரா” என்பது அக்னி பீஜம். அது அஹங்காரத்தை அழித்துவிடக்கூடிய வல்லமை கொண்டது. “ம” என்பது அம்ருதபீஜம். அது மமகாரத்தை சாந்தப்படுத்தி மனதில் அம்ருதம் போன்ற அன்பை நிறைக்கிறது. “ராம” என்று சொல்வது மனிதனுக்கு இஹலோகம், பரலோகம் இரண்டிலும் இன்பத்தைத் தரவல்லது. அதனால் தான் ராமநாமத்தை மீண்டும் மீண்டும் சொன்ன தியாகராஜ சுவாமிகளால் பக்தியை மட்டும் இன்றி பூவுலக வாழ்க்கைக்கு இனிமை சேர்க்கக்கூடிய ஸங்கீதத்தையும் அளிக்க முடிந்தது.

 
தியாகராஜ சுவாமிகள் 96 கோடி தடவை ராமநாமத்தை உச்சரித்தார் என்று சொல்லப்படுகிறது. ராம நாமத்தைச் சொன்னாலும் எழுதினாலும் பயம் நீங்கும். அதனால் அச்சமின்றி எந்தக் காரியத்திலும் வெற்றிபெற விரும்புகிறவர்கள் ராமநாமத்தை எழுத்துக்களில் “ஸ்ரீராமஜயம்” என்று எழுதுகிறார்கள்.
 
இதனை வேறுவிதமாகச் சொல்வதனால் மூலாதாரத்தில் இருக்கும் அக்னியானது “ரா” பீஜத்தைக் குறிக்கிறது. ஸஹஸ்ராரத்திலிருக்கும் ப்ராணன் “ம” பீஜத்தைக் குறிக்கிறது. மூலாதாரத்திலிருந்தும் அக்னி பிராணனைச் சந்திக்க மேலெழுப்பிச் சென்று அதனுடன் கலத்தல்தான் “ராம” என்னும் தாரக மந்திரம் பிறப்பதாகும். ஆதலால் பயமற்ற தன்மை, சாவாத் தன்மை, எல்லையற்ற ஆனந்தம், முடிவில் பகவானிடம் ஐக்கியமாக சாதகமாகிறது.
 
ராமநாமத்தைக் கூறுவது எளிது. தொடர்ந்து சொன்னால் சக்தியைப் பெறுவதும் எளிது.
 
ஆஞ்சநேயர் ராமநாமத்தைச் சொன்னபோது 33 கோடி ராமநாமங்கள் அவருக்குள்ளிருந்து எழுந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனாலேயே ராம தூதனாக அவர் அஸாத்தியமான செயல்களைச் செய்ய முடிந்தது. பலனை எதிர்பாராமல் ராம நாமத்தை ஜபித்தால் அதன் பலன் பல மடங்கு பெருகும்.
 
ராமனுடைய பாணங்கள் எதிரிகளை வீழ்த்துவதைப் போல ராமநாமம் தீயசக்திகளை அடித்து வீழ்த்திவிடும். இதை நாம் உணர வேண்டும்.
 
ராமநாமத்தின் சிறப்பைக் கம்பன் தனது இராமகாதையின் வாலி வதைப்படலத்திலே சொல்கிறார்.
 
வாலியானவன் தன் மார்பில் பாய்ந்த அம்பை, முறிததெறிய முயன்றும் இயலாமையால் “நான் மேருவையும் முறிக்கத் தக்க ப்ராக்கிரம சாலியாயிருந்தும் இந்த அம்பை முற்கிகின்றதற்கு என்னால் ஆகவில்லையே!” என்று நினைத்து, “இதில் யார் பெயர் எழுதியிருக்கின்றது?” என்று பார்த்தான்.
 
அப்போது அதில் மேல் உலகம், பூவுலகம், பாதாள உலகம் ஆகிய திரிலோகங்களுக்கும் மூலமந்திரமாகியும், தியானம் செய்கின்றவர்களுக்குத் தன் ஸ்வரூபத்தைக் கொடுக்கின்ற தாரகப் ப்ரம்மமாகியும், இம்மை, மறுமை என்கிற வியாதியை நிவர்த்தி செய்கின்ற பரம ஔஷதமாகியும் விளங்குகின்ற ஸ்ரீராமன் என்று எழுதியிருந்த திருநாமத்தை நன்றாகத் தெரியக் கண்டான்.
 
மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூலமந்த்ரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும்பதத்தை தானே
இம்மையே, ஏழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்.
 
இதனினும் உயர்வு ஒரு நாமத்துக்கு வேறு என்ன இருக்க முடியும்?
 
இதே கிஷ்கந்தாக் காண்டத்தில் இராமநாம வலிமையைக் கம்பர் வர்ணிக்கிறார். ஜடாயுவின் அண்ணன் சம்பாதி சூர்ய வெப்பத்தால் சிறககள் எரிந்து வீழ்ந்து கிடந்தபோது - அனுமன் இராமனின் திருப்பணிக்காக சீதா பிராட்டியைத் தேடிச் செல்கையில் அவனை சந்தித்து தன் தம்பி ஜடாயு மறைந்த விவரம் அறிகிறான். பின்னர் வானரர்களிடம் சம்பாதி சொல்கிறான். “நீங்கள் எல்லோரும் ஸ்ரீராமநாம சங்கீர்த்தனம் செய்யுங்கள். அதனால் எனக்குக் குறைத்து கூழையாயிருக்கிற சிறகு வளரும்.”
 
அந்த அதிசயமும் பார்போமென்று ஹனுமன், அங்கதன், ஜாம்பவான் முதலானவர்களும் இரண்டு வெள்ளம் வானர வீரர்களும் அதிக அன்புடனே, “ஸ்ரீராம” என்று அந்த நீலமேக ச்யாமன ஸ்வரூபனின் திருநாமத்தைச் சொன்னார்கள். அப்படி அவர்கள் ஸ்ரீராமநாமத்தை ஸங்கீர்த்தனம் செய்யச் செய்ய முன்னாளிலே தீய்ந்து அநேக நாளாய்க் கட்டையாயிருந்த சிறகு தளிர்த்து வளர்ந்து ஓங்கி, ஆகாய மட்டும் அளாவச் சரீரமுங் குளிர்ந்து - சம்பாதி பராக்கிராம சௌரியலந்தராய் வாளுக்கு உறையுண்டானது போலக் குறைவற்ற உறுப்புண்டாகிப் ப்ரகாசித்தார்.
 
அப்போது வானரர்களெல்லாம் உண்மைப் பொருளாகிய இராகவனின் திருநாமத்தை உச்சரித்த மாத்திரத்தால் அவருக்குச் சிறகுண்டாகிய மஹிமையைக் கண்டு, ஆச்சரியமடைந்து, தேவாதி தேவராகிய ஸ்ரீராமரை வாழ்த்திக் கொண்டாடினார்கள்.
 
- ஆர்.பி.வி.எஸ்.மணியன்