நீங்கியது சீதையின் சந்தேகம்!

நீங்கியது சீதையின் சந்தேகம்!

ஒரு நாள் இரவை இராமர், சீதை, இலட்சுமணன் ஆகிய மூவரும் சுதீட்சணரின் ஆசிரமத்தில் கழித்தனர். மறுநாள் புறப்படும் சமயத்தில் சீதை உள்ளே சென்று வில், அம்பறத்தூணி முதலியவற்றை எடுத்து வந்து கொடுத்தாள். அவற்றை எடுத்து வரும் போதே சீதையின் உள்ளத்தில் ஒரு சந்தேகம் தோன்றியது மிகுந்த யோசனையுடன் அவள் நடந்து வந்தாள்.

 
இராமர் முனிவர்களைக் காப்பாற்றுவதாக வாக்குக் கொடுத்ததைக் கேட்டது முதல் அவள் மனதில் ஒரே குழப்பம். இராமர், சீதை, இலட்சுமணன் ஆகியோராகிய தங்களுக்கு அரக்கர் ஒரு போதும் எந்தத் தீமையும் செய்தது கிடையாதே! அப்படி இருக்கும் போது முனிவர்களுக்காக அரக்கர்களைக் கொல்வது சரியாகுமா? - என்பது தான் சீதையின் உள்ளத்தில் எழுந்த சந்தேகம்.
 
தன் சந்தேகத்தை ஸ்ரீராமபிரானிடம் பணிவுடன் அவள் தெரிவித்தாள்.
 
“பொய் சொல்லுதல், பிறன்மனை கவர்தல், அநியாய ஆக்கிரமிப்பு ஆகிய மூன்றும் சுயநலம் காரணமாக மனிதன் செய்யும் அடிப்படைத் தவறு ஆகும். பொய் சொல்வது என்பது முற்றிலும் தாங்கள் அறியாத ஒன்று. பிற பெண்களைக் கனவிலும் நினைக்காத உத்தம குணம் உங்களுடையது. மூன்றாவதாகக் குறிப்பிட்ட தவறு காரணமாகத் தங்களுக்குப் பழி வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.
 
“தங்களிடம் போருக்கு வராத அரக்கர்களைக் கொல்வதன் மூலம், அவர்களை விரட்டி ஆக்கிரமித்தல் என்னும் குற்றத்திற்குத் தாங்கள் ஆளாகிவிடுவீர்களோ என்று அஞ்சுகிறேன். தாங்கள் அந்தத் தவறு செய்யப் போகிறீர்களா? ஏனென்றால், அரக்கர்களிடமிருந்து முனிவர்களைக் காப்பாற்றுவதாகத் தாங்கள் உறுதி மொழி கூறியிருக்கிறீர்கள்.
 
“அரசகுமாரர்களாகிய நீங்கள் அனைவரையுமே காப்பாற்ற வேண்டும் அல்லவா? அப்படியிருக்க நம் வம்புக்கு வராத இந்த அரக்கர்களைக் கொன்று சாதுக்களை ரட்சிப்பதாகக் கூறியிருக்கிறீர்களே! நாமோ மரவுரி தரித்து, தவசிகள் போல் வாழ இந்தக் கானகத்திற்கு வந்திருக்கிறோம். ஆனால் நீங்கள் போர்க்கோலம் பூண்டு தயாராக இருக்கிறீர்கள். கொலை செய்வது இந்த இடத்திற்கே ஏற்றதல்லவே!
 
“நாதா, உங்கள் மீது எனக்கு உள்ள அன்பு காரணமாகவே இதை நான் தங்களுக்கு நினைவுபடுத்தினேனே தவிர, அறிவுரை கூறுவதற்காக அல்ல. நானோ மிகவும் பணிவுள்ள ஒரு சாதாரணப் பெண். உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. நீங்கள் இருவரும் கலந்து ஆலோசித்து எது நல்லது என்று படுகிறதோ அதன்படியே செய்யுங்கள்” என்று, பண்பின் பெட்டகமாகிய சீதை பணிவுடன் சொல்லி முடித்தாள்.
 
அதற்கு இராமர், “தேவி, க்ஷத்திரியர்களாகிய நாங்கள் எங்கே எந்த இடத்தில் இருந்தாலும் கொடியவர்களைத் தண்டித்து நல்லவர்களைக் காப்பாற்றக் கடமைப்பட்டிருக்கிறோம். அதுவே அரச தர்மமாகும். ஆகவே அரக்கர்களைத் தண்டிப்பதில் ஆக்கிரமித்தல் என்ற குற்றத்திற்கே இடமில்லை. மேலும், மிகவும் நல்லவர்களாகிய இந்த முனிவர்களும் என்னையே நம்பி இப்போது பயமின்றி வாழ்கிறார்கள். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக, தேவையானால் உன்னையும், ஏன், தம்பி லட்சுமணனையும் கூடக் கொடுப்பதற்கு நான் தயங்கமாட்டேன். மட்டற்ற அன்பினால் நீ சொன்ன வார்த்தைகளைக் கேட்டு நான் பெரிதும் மகிழ்கிறேன். உன்னுடைய உயர்ந்த பண்புமிக்க பேச்சு, நாம் பிறந்த இரண்டு குலத்தவர்களுக்கும் உயர்வையும் பெருமையையும் தருவதாக அமைந்திருக்கிறது. நீயே என் இலட்சியத்திற்கு ஏற்ற உற்ற துணைவி ஆவாய். என் உயிரினும் மேலாக உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்” என்று உவகையுடன் கூறினார்.
 
இராமரின் விளக்கம் சீதைக்குப் பரம திருப்தியைத் தந்தது. அவள் மனதிலிருந்த சந்தேகமும் அறவே நீங்கியது.
 
- சுவாமி கமலாத்மானந்தர்