சிவனின் பாம்பு கொண்ட அகங்காரம்!

சிவனின் பாம்பு கொண்ட அகங்காரம்!

சிவபெருமானின் இருப்பிடம் கயிலாயம். பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலான தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் ஆகியொர் தினமும் கயிலாயத்தில் சிவபெருமானை வணங்குவார். அவர் பாம்பை ஆபரணமாக அணிந்தவர். அனைவரும் சிவபெருமானை வணங்குவதை, தன்னைத்தான் வணங்குகின்றனர் என்று அந்தப் பாம்பு தவறாக நினைத்து அகந்தை கொண்டது.

 
ஒரு நாள் மகாவிஷ்ணு வழக்கம் போல் சிவபெருமானைத் தரிசிக்க கருட வாகனத்தில் கயிலாயம் வந்தார்.
 
கருடனைப் பார்த்து பாம்பு, “என்ன கருடா! சௌக்கியமா?” என்று அகந்தையுடன் வினவியது. பாம்புக்கும் கருடனுக்கும் எப்போதும் பகை. 
 
கருடன் பாம்பிடம், “அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லோரும் சௌக்கியம்தான்” என்று பதில் கூறியது.
 
சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் தங்களது நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஒரு நாள் அவல வாழ்க்கையை சந்திக்க நேரும்.
 
பதவியில் இருக்கும் ஒருவர் நேர்மையுடன் நடந்தால், அந்த நேர்மையே அவரைக் காக்கும். பதவியும் பணமும் வரும் போது, பொதுவாக அகந்தையும் வந்து விடுகிறது. தொடர்ந்து வருவது அழிவு. அதற்கு வரலாற்றில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
 
பாம்பின் அகந்தையை சிவபெருமான் அறிந்தார். இறைவன் உள்ள இடத்தில் அகந்தை இருக்க முடியாது. அகந்தை கொண்ட பாம்பு எப்படி இறைவனுடன் இருக்க முடியும்?
 
கழுத்திலிருந்த பாம்பை சிவபெருமான் வேகமாகச் சுழற்றி, தொலைவில் சென்று விழும்படி வீசினார்.
 
தரையில் பலமாக மோதிய பாம்பின் தசைகள் கிழந்தன. உடல் முழுவதும் இரத்தக் காயங்கள் ஆயிரம் சுக்கல்களாகத் தலை சிதறியது. சொல்ல முடியாத வலியில் அது துடித்தது.
 
பாம்புக்கு புத்தி வந்தது! அகங்காரம் கொண்டது தவறு என்று அறிந்து, தனது தவறை நினைத்து வருந்தியது.
 
ஒரு நாள் நாரத முனிவர் அந்த வழியாக வந்தார். அவர் பாம்பைக் கண்டதும், “சிவபெருமானுக்கு ஆபரணமாக இருக்க வேண்டிய நீ இங்கு ஏன் விழுந்து கிடக்கிறாய்? உனக்கு ஏந் இந்த நிலை ஏற்பட்டது?” என்று கேட்டார்.
 
பாம்பு தனக்கு நேர்ந்த கதியை நாரதரிடம் கூறி அழுதது. “எனது பிழையை நான் உணர்ந்தேன். இழந்த சிறப்பை நான் மீண்டும் பெற்று, சிவபெருமானை அடைய தாங்களே எனக்கு வழி கூறவேண்டும்” என்று பாம்பு நாரதரைப் பணிந்து பிரார்த்தனை செய்தது.
 
தன்னைச் சரணடைந்த பாம்பின் மீது நாரதர் இரக்கம் கொண்டார்.
 
அவர், “நான் உனக்கு விநாயகர் மந்திரம் உபதேசிக்கிறேன். அதைச் சிரத்தையுடன் ஜபம் செய்து வா! விநாயகர் திருவருளால் உனக்கு நன்மை ஏற்படும்” என்று அருள் புரிந்தார்.
 
நாரதர் விநாயகர் மந்திரத்தைப் பாம்பிற்கு உபதேசம் செய்து, ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார்.
 
மனதை ஒருமுகப்படுத்தி சிறந்த பக்தியுடன் பாம்பு விநாயகர் மந்திரத்தை ஜபம் செய்தது.
 
பாம்பின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த விநாயகர் அதற்குக் காட்சியளித்தார். பாம்பு விநாயகரை பக்தியுடன் பணிந்து வணங்கியது.
 
அது தனது நிலையை விநாயகரிடம் கூறித் தன்னைக் காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டது.
 
அதற்கு விநாயகர், “எனது அருளால் உனக்குப் பழைய உடல் ஆரோக்கியம் கிடைக்கும். மீண்டும் சிவபெருமானின் கழுத்தில் ஆபரணமாக இருக்கும் உயர்ந்த நிலையை நீ அடைவாய்! ஆயிரம் சுக்கல்களாகச் சிதறிய உனது தலை ஆயிரம் தலைகளாக மாறி, விஷ்ணுவின் பாம்பணையாக இருக்கும் பாக்கியமும் உனக்குக் கிடைக்கும்! மேலும, எனது இடுப்பிலும் நாகாபரணமாக இருக்கும் நிலை உனக்கு கிடைக்கும்” என்று அருள் புரிந்தார்.
 
விநாயகர் அருளால் சிவனின் தலைமுடியிலும், விஷ்ணுவின் பாம்பணையாகவும், விநாயகரின் நாகாபரணமாகவும் இருக்கம் பேறு பாம்பிற்குக் கிடைத்தது.
 
- சுவாமி கமலா்மானந்தர்