நிலவும் நிலவொளியும் போன்றதே சிவனும் தேவியும்!

நிலவும் நிலவொளியும் போன்றதே சிவனும் தேவியும்!

சிவலிங்கம் என்பது சிவபெருமானுடைய ஜோதி வடிவமாகும். உலகில் ஸ்தூலமாகவும் நுட்பமாகவும் இரண்டு வகை வடிவங்கள் உண்டு. சிவனது நுட்பமான வடிவமே சிவலிங்கமாகும்.

வானத்தில் நாம் காணும் சூரியன் ஒரு ஜோதிலிங்கம், அதன் ஆதியையும் அந்தத்தையும் அறிவார் எவருமே இல்லை. (திருவண்ணாமலை தல வரலாற்றில்) பிரமன், ஒரு விஞ்ஞானி தொலைநோக்குக் கண்ணாடி கொண்டு ஆராய்ந்து பார்ப்பது போல, சிவபெருமானின் இந்தக் கம்பம் (தூண்) வடிவமான ஜோதியின் ஆரம்பத்தைக் காண முயன்றான், ஆனால் அதை அறிவது அசாத்தியமாகையால், பொய்யைத் துணைகொண்டு, எண்ணமற்ற ஒளி ஆண்டுகளைக் கணக்கிட்டு, ஜோதி ஸ்தம்பத்தின் ஆதியைக் கண்டதாகக் கூறினான்.
 
இந்தப் பெருஞ்ஜோதிக்கு அந்தமே இல்லை என்பதையும், அனந்தமே பூர்ணம், என்பதையும் அறிந்த திருமால், பிரம்மம் என்பது, சூரியனுக்குச் சமமான ஜோதி, இது அந்தமற்ற, ப்ரஹ்மஸுர்யஸமம் ஜ்யோதி என்றான். இந்தப் பெருஞ்ஜோதியில் ஸ்தூலமாக நாம் காணும் சூரியன் ஒரு புள்ளி போன்றவன்.
 
உலகில் ஆண் உருவமானது லிங்கம், தாய் வடிவமான பிரகிருதியே உமை. லிங்கம் என்பது, படைக்கும் ஆற்றல் அதன் சொரூபம் பிராணமயம்.
 
பிராணன் அடிப்படையில் ஒன்றே ஆயினும், அதுவே சிவனாகவும் பார்வதியாகவும், ஆணாகவும் பெண்ணாகவும், நுட்பமாகவும் ஸ்தூலமாகவும் வடிவம் பெற்றது. சிவனே தேவி, தேவியே சவின் நிலவும் நிலவொளியும் போல இவர்களுக்கிடையில் வேறுபாடு இல்லை என்று லிங்க புராணம் கூறுகிறது.
 
- சுவாமி கமலாத்மானந்தர்