ஸ்ரீ சக்கரம்

ஸ்ரீ சக்கரம்

சக்தி வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் ஸ்ரீசக்கர வழிபாடானது, நமது நாட்டின் பல இடங்களில் பிலமாக இருந்து வருகிறது. காமாட்சி, துர்க்கை, ராஜராஜேஸ்வரி, லலிதாம்பிகை போன்ற தெய்வங்களுக்கு ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்வதும், அதை தனிப்பட்ட முறையில் வழிபாடு செய்வதும் வழக்கத்தில் இருந்து வருகிறது. சக்தி வாய்ந்த ஸ்ரீசக்கர வழிபாட்டை தகுந்த முறைப்படிஉபதேசம் பெற்று, உரிய நியமங்களுடன் வழிபட்டு வந்தால் பல நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஆன்றோர்களுடைய நம்பிக்கையாகும்.

 
ஆதிசங்கரர் பல்வேறு சாக்த தலங்களுக்கு சென்று அங்கு உக்கிரமாக இருந்து அம்பிகைகளின் மூல ஸ்வரூபங்களுக்கு முன்னர் அல்லது அந்த கோவில்களின் உட்புறத்தில் ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்து அந்த தெய்வ மூர்த்தங்களை சாந்த சொரூபிணியாக மாற்றியுள்ளார். பிரபலமான காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலும் அவரால் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. ஒற்றைக் காலில் நின்றபடி அம்பிகை தவம் செய்யும் மாங்காடு தலத்திலும் அர்த்த மேரு அமைப்பில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல கோவில்களில் ஸ்ரீ சக்கிர பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.
 
சிதம்பரத்தில் சிவ சக்கரமும், சக்தி சக்கரமும் ஒருங்கிணைந்த வடிவமாக இருக்கும் ஸ்ரீசக்கரம், சிதம்பர ரகசியமாக வழிபடப்படுகிறது. கயிலாய பிரஸ்தாரம், மஹாமேரு பிரஸ்தாரம், அர்த்தமேரு பிரஸ்தாரம், பூபிரஸ்தாரம் என்று பலவகைகளில் இருப்பதாக பெரியோர்களால் சொல்லப்பட்ட ஸ்ரீ சக்கரம், எங்கு இருக்கிறதோ அங்கு லட்சுமி கடாட்சம் பெருகுவதாக ஐதீகம். அதனால் ஆன்மிக சின்னங்களில் இது முக்கியமான இடத்தை பெற்றிருக்கிறது.