மகாலட்சுமிக்கான வழிபாட்டு முறைகள்!
திருமாலின் தேவியான திருமகளை மறவாமல் வழிபட்டு வந்தால், வற்றாத செல்வமும் வறுமையற்ற வாழ்வும் சிட்டிடும் என்பது நம்பிக்கை. ஸ்ரீ மகாலட்சுமி தாமரைப்பூவில் வாசம் செய்பவள் ஆவாள். ஹரண்மயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரணி, சந்திரா ஆகியவை லட்சுமி தேவியின் மற்ற பெயர்களாகும். லட்சுமிக்கு பிடித்தமான மலர் செவ்வந்தி எனப்படுகின்ற சாமந்தி மலராகும். ஒருவருக்கு பெருஞ்செல்வமும், செழுமை நிறைந்த வாழ்வும் அமையவேண்டுமென்றால் லட்சுமியின் அருள் மிக மிக அவசியமாகும். துவாதசி தினத்தன்று ஜகத்குரு ஆதி சங்கரருக்கு நெல்லிக்கனி தானமாய் கொடுத்த பெண்மணியின் வரிய நிலையை நீக்கிட லட்சுமிதேவியின் அருளுடன் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார் ஆதி சங்கரர்.
பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், ஆலயங்களில் காலை நேரத்தில் கோபூஜை செய்தபின்பே தரிசனம் ஆரம்பமாகின்றது. ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கு உகந்த துளசியானது லட்சுமி தேவியின் அம்சமாகக் கருதப்படுகின்றது. வீட்டில் துளசி மாடம் வைத்து விளக்கேற்றி தினமும் அதனை சுற்றி வந்து வழிபட்டால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம். மேலும், வாழை, மாவிலை, எலுமிச்சம் பழம் ஆகியவற்றிலும் மகாலட்சுமி வாசம் செய்வதால் சுபகாரியங்கள் அனைத்திலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இதைத்தவிர, திருமணமான பெண்களின் நெற்றி முன் வகிட்டில் வைக்கப்படுகின்ற குங்குமத்திலும், தீபாவளியன்று அதிகாலையில் கங்கா ஸ்ஸானம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் நல்லெண்ணையிலும், யானை மற்றும் குதரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
வைணவத்தை நிலைநாட்டிய வேதாந்த தேசிகர் “ஸ்ரீ ஸ்துதி என்னும் ஸ்தோத்தரத்தில் ஸ்ரீ மகாலட்சுமியை” “மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள்” எனப் போற்றிப் பாடுகின்றார். குபேரனிடம் செல்வம் மிக இருந்தாலும், அத்துடன், புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை அள்ளித் தருபவள் ஸ்ரீ மகாலட்சுமியே! வரலட்சுமி விரதமிருந்து பூஜை செய்யப்படுகின்ற வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், நிறைந்த செல்வம், நல்ல உடல் ஆரோக்கியம் ஆகியவை அவசியம் கிடைத்திடும் எனப்து நம்பிக்கை. எட்டு விதச் செல்வங்களை அளிப்பதோடு, பெண்களுக்கு நிறைந்த தாலி பாக்கியத்தையும் தந்திடுவாள் மகாலட்சுமி. இதன் காரணமாகவே மணமான பெண்கள் மகாலட்சுமியைப் போற்றி வரலட்சுமி விரதத்தை மேற்கொள்கின்றார்கள்.
மகாலட்சுமி வழிபாட்டின்போது, லட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களைப் பாடித் தியானிப்பது சிறப்பானது. லட்சுமி பூஜையின்போது, மகாலட்சுமியின் படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி. தீபாராதனை செய்து வழிபடவேண்டும். வீட்டில் உள்ள உப்புப் பாத்திரத்தில் உப்பின் அளவு ஒருபோதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எட்டு விதமான எண்ணைகள் கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு உகந்ததாகும். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்டலட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என சாஸ்திரங்கள் பகர்கின்றன. மகாலட்சுமிக்கான பூஜைகள் செய்யப்படும்போது மஞ்சள் நிறப்பட்டு அணிவிப்பது லட்சுமிக்கு மிகவும் உகந்ததாகும்.
மகாலட்சுமியை பக்தியுடன் முறையாக பூஜைகள் செய்து வணங்கிடும் அனைவருக்கும் எல்லா விதமான நன்மைகளும் தருபவள் என அதர்வன வேதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலட்சுமி விரததினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகள் நைவேத்தியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழிபடலாம். ஆனால், மறுநாள் அந்த சந்தன விக்கிரகத்தை நீர் நிலைகளில் கரைத்து விடவேண்டும். வரலட்சுமி விரதத்தன்று புண்ணிய நதிகளில் நீராடுவது நல்லதாகும். லட்சுமி வழிபாட்டின்போது மறக்காமல் “அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்” சொல்வது மிகவும் அவசியமாகும்.
- அபிதா மணாளன்