பக்தர் துயர் துடைக்கும் மகாலட்சுமி திருத்தலம்!

பக்தர் துயர் துடைக்கும் மகாலட்சுமி திருத்தலம்!

பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த பரந்தாமன், “இங்கிருக்கும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் பாக்கியத்தைத் தந்த உனக்கு வரம் தர விரும்புகிறேன். வேண்டும் வரத்தைக் கேள்” எனக்கூறவே, மகாலட்சுமி, “எங்கு நான் இருந்தால் மக்களின் கஷ்டங்கள் நீங்குமோ அந்த இடத்தை காண்பிக்க வேண்டும்” என வேண்டினாள். கேட்ட வரத்தை மகாவிஷ்ணுவும் அளித்தார். 

 
பூலோகத்தில் மாரீசன் மற்றும் இராவணன் போன்ற அரக்கர்கள் அழித்து, மக்களைக் காப்பாற்றி பிறப்பற்ற நிலையை அடைய, நீலி வனம் என்னும் காட்டில் சிபிச் சக்கரவர்த்தி தங்கிருந்தபோது, வெள்ளைப் பன்றி ஒன்று தோன்றி, யார் கையிலும் பிடிபடாமல் சுவேத்கிரி என்ற மலையின் மீது ஏறி, ஒரு புற்றில் நுழைந்து மறைந்து விட்டது.
 
அங்கிருந்த மார்க்கண்டேய முனிவரிடம் மன்னன் இது பற்றிக் கேட்க, “ஆதி வராகமான நாராயணப் பெருமாள்தான் காட்சியளித்தார். எந்தப் புற்றில் பன்றி மறைந்ததோ, அங்கு பாலாபிஷேகம் செய்” என அவரும் கூற, மன்னன் அவ்வாறே செய்தான். அப்போது அங்கு மகாவிஷ்ணு காட்சியளித்தார். மன்னனும் பகவான் தரிசனம் கொடுத்த இடத்தில் ஆலயம் எழுப்பினார். மகாவிஷ்ணு, மகாலட்சுமி முன்பு கேட்ட வரத்தின்படி, மகாலட்சுமிக்கு தரிசனம் தந்து, அதே இடத்தில் தங்கினார்.
 
இவ்வாலய கும்பாபிஷேகத்திற்கு வந்த 3700 அந்தணர்களில் ஒரு அந்தணர் வழியில் இறந்து விட கும்பாபிஷேகம் தடைப்படாமல் நடக்க, இறைவனே ஒரு அந்தணராகச் சேர்ந்து வந்து கும்பாபிஷேகம் நடத்திய ஆலயமே திருவெள்ளரை புண்டரீகாக்ஷப் பெருமாள் ஆலயம். சுவாமி புண்டரீகாக்ஷப் பெருமாள் என்றபோதிலும் இங்கு மகாலட்சுமி தாயாருக்கே முதலிடம்.
 
இவ்வாலயத்தின் இரண்டு வாசல்களில் தை முதல் ஆனி வரையுள்ள உத்தராயண காலத்தில் ஒரு வாசலும், ஆடி முதல் மார்கழி வரையான தட்சணாயன காலத்தில் ஒரு வாசலும் திறந்திருக்கும். ஒன்று திறந்திருக்கும் போது மற்றொன்று மூடியிருக்கும். இங்குள்ள பெருமாளைச் சேவிக்க கீதையின் 18 அத்தியாயங்களைக் குறிக்கும் 18 அத்தியாயங்களைக் குறிக்கும் 18 படிகளையும், 4 வேதங்களைக் குறிக்கும், 4 படிகளையும், பஞ்ச பூதங்களைக் குறிக்கும் 5 படிகளையும் கடந்து வாசல் வழியாக பலிபீடம் முன்பு தங்கள் கோரிக்கைகளை வைக்க, மக்களின் கஷ்டங்கள் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
 
இத்தலம் திருச்சி - ஸ்ரீரங்கத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.