ஸ்ரீ ராமனுக்கு வெற்றியருளிய ஸ்ரீமஹா பிரத்யங்கிரா தேவி!
ராம-ராவண யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயம் அது. ஏழு நாட்கள் லட்சமணனுக்கும் இந்திரஜித்துக்குமான போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. மறைந்து மறைந்து மாயாவியாக, போரிட்டுக் கொண்டிருந்த இந்திரஜித், எட்டாம் நாள் போருக்கு வரவே இல்லை வெகுண்ட லட்சுமணர், “மேகநாதன் எங்கே? நாக பாசத்திலிருந்து விடுபட்டோம் என்ற அறிந்தவுடன் ஓடி ஒளிந்து கொண்டானா?” என்று அனல் தெறிக்கக் கேட்டான்.
“அவனை அவ்வளவு எளிதாக எண்ணாதே! இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பெயர் வாங்கியவன். ஓடி ஒளியுமளவு கோழையல்லஞ நாகலோகத்தை வென்று நாககுமாரி சுலோசனாவுக்கு மாலையிட்டவன்! ராம லக்ஷ்மணர்களை வெற்றி கொள்வதென்பது சாதாரண விஷயமா? நிகும்பலை யாகம் நடத்தப் போயிருக்கிறான். யாகம் பூர்த்தியாவதற்குள் நாம் அங்கு சென்று அவனை யுத்தத்திற்கு அழைக்க வேண்டும்” என்று விளக்கினார் விபீஷணர்.
“நிகும்பலை யாகமா? அது யாரை நோக்கி நடத்தப்படுகிறது?” என்று வினவினார் ராமபிரான்.
“ஸ்ரீ பிரத்யங்கிரா தேவியைக் குறித்து செய்யப்படுகிறது. வனங்கள், நதி தீரங்கள், மலைகள், மயான மையங்கள் இவற்றில் ஏதாவதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த யாகம் செய்தால் கோரிய பலன் கிடைக்கும்.”
“இந்திரஜித் எங்கே வேள்வி இயற்றுகிறான்? உடனே புறப்படுவோம்” என்று துடித்த லக்ஷ்மணனை, “பொறு, லக்ஷ்மணா! ஆத்திரப்படாதே. நாமும் அந்த தடைதகர்க்கும் தேவியைப் பிரார்த்திப்போம்” என்றார் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி.
இருவரும் பிரத்யங்கிரா தேவியைப் பிரார்த்திக்க தேவியும் ரகுநந்தனனுக்குக் காட்சி கொடுத்தாள்.
“தர்மம் தழைக்க உதவ வேண்டும்” என்று தாசரதிகோர “அப்படியே ஆகட்டும் ஜய விஜயீ பவ” என ஆசீர்வதித்து மறைந்தாள் மாதா.
எட்டு திசைகளிலும் மயானங்கள் சூழ்ந்திருந்த இடத்தில் நிகும்பலை யாகத்தை நடத்திக் கொண்டிருந்தான் இந்திரஜித்.
வீர சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆயிரம் சிங்க முகங்களோடும், இரண்டாயிரம் சுரங்களோடும் உதித்தவளே பிரத்யங்கிரா தேவி. அபராஜிதா என்ற பெயரும் அவளுக்குண்டு். இவளது மந்திரத்தை பிரத்தியங்கிரஸ், அங்கிரஸ் என்ற இரு மகரிஷிகள் சேர்ந்து உருவாக்கியதால் அவர்களது பெயரால் அவள் அழைக்கப்படுகிறாள்.
நரசிம்ம மூர்த்தியின் கோபம் இரணியனை சம்ஹாரம் செய்த பிறகும் அடங்கவில்லை! அவரது சினத்தைத் தணிக்க சரபேஸ்வரர் தோன்றினார். அவரது இரு இறக்கைகளில் ஒன்று சூலினி துர்க்கை, மற்றொன்று அதர்வண காளி என்று சொல்லப்படுகிறது.
அதர்வண காளிதான் பிரத்யங்கரா தேவி என்றும் சில நூல்கள் உரைக்கின்றன.
லக்ஷ்மணன், விபீஷணர் துணையோடு இந்திரஜித் யாகம் செய்யும் இடத்திற்கு வந்து போருக்கு வருமாறு அறைகூவி அழைக்க இந்திரஜித்தின் கவனம் சிதறியதால் மந்திர உச்சாடனம் தடைப்பட்டது. ஆத்திரத்தோடு யுத்தம் செய்ய வந்தவன், லக்ஷ்மணன் எய்த பாணத்தை மார்பிலே வாங்கி மண்ணில் சரிந்தான்.
மாமனாரைத் தவிர வேறெவர் கையாலும் தான் சாகக் கூடாதென்று வரம் வாங்கியிருந்தான் இந்திரஜித். அங்கே லக்ஷ்மணனாக நிற்பது நாகராஜனான ஆதிசேஷனே என்பதை அவன் அறியவில்லை!
இந்திரஜித் மரணத்தருவாயில் பிரத்யங்கிரா தேவியை நினைத்தான். தேவி பிரத்யட்சமாகி அவனுக்கு மோட்சத்தை அளித்தாள்.
இவ்வாறே பஞ்ச பாண்டவர்களும் காவிரியின் தென் கரையில் அமர்ந்து அன்னை பிரத்யங்கிராதேவியை வழிபட, தேவி காட்சியளித்து “இழந்த பூமியும், செல்வங்களும் மறுபடி கிடைக்கும்” என்றருளினாள்.
அன்னையை அர்ச்சிக்க பத்ரங்களையே அவர்கள் உபயோகித்தனர். ஐந்துபேரும் விதவிதமான பத்ரங்களை மனதில் நினைக்க அப்படியே அவர்களுக்கு கிடைத்தது. அரசு, புரசு, இச்சி, மா, ஆல் என ஸ்தல விருட்சத்தில் அவர்களுக்கு கிடைத்த ஐந்துமர இலைகளைக் காணலாம். ஐவார்பாடி (தங்கிய இடம்) நாளடைவில் மக்கள் நாவில் மருவி அய்யாவாடி ஆயிற்று என்று சொல்லப்படுகிறது.
உப்பிலியப்பன் கோவிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் பிரத்யங்கிரா தேவியின் சன்னதி வடக்கு நோக்கியிருக்கிறது. சிம்ம முகம், 18 கரங்களிலும் சூலம், பாசம், பாருகம் போன்ற பல்வேறு ஆயுதங்களுடன், சிரசில் சந்திரக் கலையோடு, இரண்டு ஆள் உயரத்தோடு, நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் உட்கார்ந்த நிலையில், இருபுறமும் லக்ஷ்மி, ஸரஸ்வதியுடன் அருள் பாலிக்கின்றாள் அன்னை.
காண்பதற்கு பயங்கரமாய் தோன்றினாலும் பில்லி, சூன்யம், வைப்பு, ஏவல் என்று கஷ்டப்படும் பக்தர்களை அவற்றினின்று விடுவிக்கிறாள் பித்யங்கிரா தேவி.
குணமாகாத வியாதி, காயம் இவைகளும் குணமடைய பிரத்யங்கிரா தேவியை வேண்டிக் கொள்ளப்படுகின்றது. தரிசிக்க வருபவர்கள் மிளகாய் வற்றலும் கொண்டு போய் கொடுக்கலாம். இந்த தேவியைப் பிரார்த்தித்து வேண்டிக் கொண்டால் காணாமற் போன பொருள் திரும்பக் கிடைக்கும். திருஷ்டி தோஷங்கள் நீங்கும். பகைவர் தொல்லை இராது. வெற்றி கிட்டும்.
வருடத்துக்கொருநாள் தைமாதம் சங்கராந்தியன்று அம்பிகைக்குப் புனுகு தைலம் சாற்றப்படுகின்றது.
சென்னைக்கு அருகிலுள்ள சோளிங்கநல்லூர், மற்றும் சின்னாளப்பட்டி ஆகிய ஊர்களில் பிரத்யங்கிரா தேவிக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன. புதுச்சேர்-திண்டிவனம் சாலையில் உள்ள மொரட்டாண்டி கிராமத்தில் பிரத்யங்கிராதேவிக்கு பிரம்மாண்டமான கோவில் இருக்கிறது.
காரியத்தடைகள் அகல பிரத்யங்கிரா தேவியை தியானிப்போமாக!
அமைவிடம் - கும்பகோணத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஐயாவாடி என்ற இடத்தில் அமைந்துள்ள இக்கோயில்.
- ஆர்.பொன்னம்மாள்