திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம்!
பெருமாள் : ரங்கநாதன் அழகிய மணவாளன் புஜங்கசபனம் தெற்கே திருமுகமண்டலம்
தாயார் : ரங்கநாயகி
விமானம் : ப்ரணவாக்ருதி விமானம்
தீர்த்தம் : காவேரி, சந்திர புஷ்கரிணி
ப்ரத்பக்ஷம் : தர்மவர்மா, காவேரி, விபீஷ்ணன், சந்திரன்
மங்களாசாசனம் : மதுரகவியைத் தவிர ஏனைய ஆழ்வார்கள் (11 ஆழ்வார்கள், 247 பாசுரங்கள்) திருச்சிக்கு அருகில். இங்கு பள்ளி கொண்டுள்ள பெருமாள் சத்தியலோகம் எனப்படும் பிரம்மலோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்ட திருவாராதனப் பெருமாள் ஆவார்.
இட்சுவாகு என்னும் மன்னன் பிரம்மனைக் குறித்து கடுந்தவமியற்றினான். இவன் தவத்தை மெச்சிய பிரம்மன் இவனுக்கெதிரில் தோன்றி வேண்டிய வரம் கேள் என்றான். அதற்கு இட்சுவாகு, பிரம்மானே உம்மால் தினந்தோறும் பூஜிக்கப்படும் திருமாலின் திருவாராதன விக்ரகமே எனக்கு வேண்டுமென்று கேட்க பிரம்மனும் மறுப்பின்றி வழங்கினான். இப்பெருமானே இட்சுவாகு மன்னன் முதல் இராம பிரான் வரையில் உள்ள சூரிய குலமன்னரெல்லாம் வழிபட்டு வந்த குலதெய்வமாயினான்.
திரேதா யுகத்தில் இராமவதாரம் மேற்கொண்ட திருமால் இராவணனையழித்து. அயோத்தியில் பட்டம் சூட்டிக் கொண்டார். இலங்கையிலிருந்து தன்னுடன் போந்த வீடணனுக்கு விடைகொடுத்து அனுப்பும் போது, தன் முன்னோர்களால் பிரம்மனிடமிருந்து கொணரப்பட்ட இந்த திருவாராதனப் பெருமாளை வீடணனுக்கு (விபீஷணனுக்கு) சீதனமாக கொடுத்தார்.
மிக்க பயபக்தியுடன் ப்ரணா வாக்ருதி என்ற விமானத்துடன் அப்பெருமானை எழுந்தருளச் செய்து இலங்கைக்கு வீடணன் கொண்டு வருங்காலை, வண்டிணம், முரல குயில் கூவ. மயிலினம் ஆட, செழுநீர் சூழ தன் சிந்தைக்கு இனிய அரங்கமாகத் தோன்றின. இந்த காவிரி, கொள்ளிட நதிகட்கிடையில் பள்ளி கொள்ள விரும்பிய திருமால் வீடணனுக்கு சற்றுக் களைப்பையும் அசதியையும் உண்டு பண்ண வீடணன் இப்பெருமாளை இங்கிருந்திக்கிடைப்பட்ட இவ்விடத்தில் சற்றெ கிடாத்தினான்.
அம்மட்டே தன் உள்ளங்கவர்ந்த இடமாதலால் அசைக்க இயலா அளவிற்கு வீடணன் செல்ல வேண்டிய தென்றிசை நோக்கி இன்றுள்ள வடிவில் பள்ளி கொண்டார்.
இக்கோவில் காவிரியாற்றின் வெள்ளப் பெருக்கால் சிதலமடைந்து, மண் அரித்துக் காடு, சூழ்ந்து யாருக்கும் தெரியா வண்ணம் மறைந்து இருக்கையில் சோழமன்னன் தர்மவர்மாவின் மரபில் வந்த கிள்ளிவளவன் இக்காட்டிற்கு வேட்டையாட வந்து ஒரு மர நிழலில் தங்கியிருக்கும் போது அம்மரத்தின் மீதியிருந்த கிளி ஒன்று வைகுண்டத்தில் உள்ள மகாவிஷ்ணுவின் கோவிலான திருவரங்கம் இருந்த இடம் இது. இப்போது அக்கோவிலைக் காணலாமெனத் திரும்பத் திரும்பச் சொல்லியது. இதைக் கேட்டுப் பலவிடத்தும் தேடியலைந்தும் கோவிலைக் காணாது அயர்ந்த கிள்ளிவளவனின் கனவில் தன் இருப்பிடத்தை எம்பெருமான் தானே காட்டியருளினார். அவ்விடத்தைக் கண்ட கிள்ளிவளவன் மெய்சிலிர்த்து தொழுது நின்று மீளவும் மதிலும் கோபுரமும் எழுப்பினான்.
இவனுக்குப் பின் வந்த சோழ மன்னர்கள். பாண்டிய மன்னர்கள். விஜயநகர மன்னர்கள், ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள் ஆகியோரின் தொடர்பாணியால் இன்று உள்ள அளவு உயர்ந்தோங்கி செம்மாந்து நிற்கிறது திருவரங்கம்.
- N. கிருஷ்ணமூர்த்தி