திங்களூர் கைலாசநாதர் ஆலயம்!

திங்களூர் கைலாசநாதர் ஆலயம்!

தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாக அமைத்து வாசுகி எனும் பாம்பைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்த போது கொடிய ஆலகால விஷம் வெளிப்பட்டது. இறைவன் அதை விழுங்கி தமது தொண்டையில் நிறுத்தாிக் கொண்ட கதை அறிவோம். பிறகு பல பொருள்கள் பாற்கடலிலிருந்து கிடைத்தன. அவ்வாறு தோன்றிய பொருள்களில் ஒருவர் சந்திரன் என்கிறார் வில்லிபுத்தூராழ்வார்.


களைத்து, சோர்ந்து போயிருந்த தேவர்களைச் சந்திரன் தனது அமிர்த கலைகளை வீச மெய் குளிரவைத்து உற்சாகமும் புத்துணர்ச்சியும் ஊட்டினான் என்கிறார் அவர். பிறிதொரு காலம் தட்சனால் சபிக்கப்பட்ட சந்திரன், சிவபெருமான் திருவருளால் அவரது தலையை அணி செய்யும் பிறைச் சந்திரனாக விளங்குவதால் தேவர்கள் முதலானோர் சிவபெருமானை வணங்கும் போது அவர்களுடைய வணக்கத்திற்கும் வந்தனைக்கும் உரியவனாகிறான் சந்திரன். சந்திரன், திருமாலின் மார்பில் உதித்தவன் என்றும், அத்திரி முனிவருக்கு அனுசுயா தேவி மூலம் பிறந்தவர் என்றும் கூறுவதுண்டு.

 
தட்சன், அசுவதி முதல் ரேவதி வரை தன் புத்திரிகளான 27 பேரையும் சந்திரனுக்கு மணம் முடித்து வைத்தார். அவர்களில் ரோகிணி மற்றும் கார்த்திகையிடம் மட்டும் சந்திரன் பிரியமாக இருந்ததால் இதர பெண்கள் தட்சனிடம் முறையிட்டார்கள். தன் பெண்களிடம் சந்திரன் பாரபட்சம் காட்டுவதாக தட்சன் கோபம் கொண்டு சந்திரனுடைய கலைகள் பதினாலும் தினம் ஒன்றாகத் தேய்ந்து போகும்படி சாபம் கொடுத்து விடுகிறான். தினம் ஒன்றாகக் கலைகள் அழிந்து வருவதைப் பார்த்துக் கலக்கமடைந்த சந்திரன் இத்தலத்தில் தவம் செய்து சிவபெருமானைத் தஞ்சம் அடைகிறான். சிவபெருமான் சந்திரனுக்கு அபயம் அளித்து சந்திரனுடைய 16 கலையைத் தமது சிரசில் தரித்துக்கொண்டு தக்கன் சாபப்படி ஒருபட்சத்தில் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்தபோதும் மற்றொரு பட்சத்தில் அவை மீண்டும் ஒவ்வொன்றாக வளரத் தொடங்கும் என்றும் அருளாசி வழங்குகிறான். சந்திரன் தங்கி, தவம் இருந்து, பூசை செய்து பலனடைந்ததால் இத்தலம் திஙகளூர் ஆயிற்று.
 
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் (தஞ்சாவூரிலிருந்து பதினெட்டு கிலோ மீட்டர்) தூரத்தில் இருக்கிறது திங்களூர் திருத்தலம். திங்களூர் பேருந்து நிலையத்தில் இருந்து வடதிசையில் செல்லும் சிறிய பாதையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஆலயம். இறைவன் பெயர் கைலாசநாதர், அம்பாளின் பெயர் பெரியநாயகி, சிறிய கோயில்தான். ஆனால் மிகவம் துப்புரவாக வைத்திருக்கிறார்கள். ஆலயத்தின் அருகில் ஓரிரண்டு சிறு கடைகளைத் தவிர பெரிய கடைகள் கிடையாது. வழிபாட்டுக்குத் தேவையான பொருள்களை வரும்போதே வாங்கி வந்து விடுவது நல்லது.
 
ஆலயத்திற்குத் தெற்கிலும் கிழக்கிலும் வழிகள் உள்ளன. தெற்குப் பக்கம் கோபுரம் இருக்கிறது. உள்ளே தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதி இருக்கிறது. அடுத்து வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் சந்நிதி, வடமேற்குப் பகுதியில் கஜலட்சுமியும், வடக்குப் பக்கம் கருவறை சுவரை ஒட்டி துர்க்காதேவியும், சண்டிகேஸ் வரரும் இருக்கிறார்கள். கிழக்குப் பிராகாரத்தில் பைரவர், நவக்கிரக சந்நதிகள் உள்ளன. கிழக்கு நோக்கிய வாயிலை அடுத்து இடது புறத்தில் இத்தலத்தின் க்ஷேத்திர பாலகரான சந்திரன் சந்நிதி இருக்கிறது. சிறிய தனிக் கோயிலில் சந்திரன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சந்நதிக்கு முன்னால் அமர்ந்து வழிபட மண்டபம் இருக்கிறது.
 
கிழக்குப்புற வாயில் வழியாகக் கோயிலினுள் நுழைந்தால் இடதுபுறம் சூரியன் சந்நிதி உள்ளது. அடுத்து மடப்பள்ளியும், தீர்த்தக் கிணறும் உள்ளன. தெற்கு வழியாக மண்டபத்தில் நுழைந்தால் இடது பக்கம் அப்பூதி அடிகள், அவர் குடும்பத்தார் திருஉருவச் சிலைகளும், வலது புறம் திருநாவுக்கரசு சுவாமிகளின் திருஉருவச் சிலையும் உள்ளன. இவற்றைக் கடந்து உள்ளே சென்றால் கிழக்கு நோக்கிய இறைவன் சந்நிதியும், தெற்கு நோக்கிய அம்பாள் சந்நதியும் உள்ளன.
 
ஆண்டு தோறும் பங்குனி உத்திர தினத்தன்று காலை உதயாதி ஆறு மணிக்கு சூரிய ஒளி கருவறையில் உள்ள கைலாசநாதர் திருஉருவச் சிவலிங்கத் திருமேனி மீது படர்வதால் அன்று சூரிய பூஜையும், மறுநாள் மாலை ஆறரை மணிக்கு சந்திரனின் ஒளி கைலாசநாதர் மீது பொழிவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறுவது இவ்வாலயத்தில் சிறப்பு நிகழ்ச்சியாகும். இதைப் போலவே புரட்டாசி மாதத்து பௌர்ணமி அதற்கு முன், பின் ஆகிய இரு நாட்களிலும் சந்திர ஒளி இறைவன் கைலாசநாதரை ஆராதனை செய்வது போல் அவர் மீது விழுவதை இப்போதும் பார்க்கலாம். கருவறையில் இறைவன் கைலாசநாதர் திருமேனி மீது சந்திரப் பிறை சூடியிருப்பதும் விசேஷமாகும்.
 
- K. குருமூர்த்தி