குரு பெயர்ச்சி பலன்கள் - 2026 - தனுசு

குரு பெயர்ச்சி பலன்கள் - 2026 - தனுசு

தனக்கு தானே எதையும் செய்து கொண்டு செயல்பட நினைக்கும் தனுசு ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு குரு பகவான் ராசிநாதனாகவும், சுகஸ்தானதிபதியுமாக இருக்கும் குரு அட்டம ஸ்தானத்தில் அமர்ந்து பார்க்குமிடம் சிறப்பான பலனை பெற்று தரும். குறுகிய காலத்தில் எதையும் ஜெயிக்கும் மனவலிமையை கொண்ட நீங்கள் திறம்பட செயல்பட்டு பலவித நன்மைகளை அடைவீர்கள். குரு பகவான் எங்கு இருந்தாலும் தன் வீடு மீது தனி கவனம் செலுத்துவதால் எதுவாக இருந்தாலும் அதனை நீங்களே சரி செய்து கொள்வீர்கள்.
 
உங்களின் ராசிநாதன் குரு பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் அமர்வது பொருளாதார தடைகள், வருமான இழப்பு செல்வாக்கு இழப்பு போன்றவை வரும் என்றாலும் உங்களின் ராசிநாதன் என்பதால் அது மாதிரியான குறைபாடுகள் நீங்கும் இருப்பினும் என்ன தான் நம்பிக்கைக்கு பாத்திரமான நண்பராக இருந்தாலும் ரத்த சம்மந்தபட்ட உறவாக இருந்தாலும் அவருக்காக பிணையம் இடுவதை தவிர்த்து விடுவது நல்லது. அப்படி மீறி செயல்பட்டால் பிரச்சனை உங்களுக்கு தான் வரும். தனஸ்தானத்தை குரு பார்ப்பது தேவைகளுக்கான பொருளாதார சூழ்நிலைகள் உருவாகும். கொடுத்த இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த படி உடனே கிடைக்காது சற்று தாமதமாகும்.
 
இருக்கும் தொழிலை சிறக்க செய்வதே உங்களுக்கு நல்ல பலனை பெற்று தரும். சுகஸ்தானத்தில் சனி அமர்ந்து தொழில் ஸ்தானத்தையும், ராசியையும் பார்ப்பதால் தொழிலில் நீங்கள் சரியாக இருந்தால் அதுவும் சரியாக இருக்கும். பிறரின் பேச்சை கேட்டு மாற்றம் செய்தால் தொழில் முடக்கம் உண்டாகும். இருப்பினும் ராசிநாதன் குரு பார்வை சனிக்கு இருப்பதால் சனியின் தாக்கம் அதிகம் பாதிப்பை தராது. சுகஸ்தானத்தின் அதிபதி குரு என்பதால் உடல்நலனில் முன்னேற்றம் உண்டாகும். மருத்துவ செலவு குறையும். வாகன வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். புதிய திட்டங்களை சிறுகாலத்திற்கு தள்ளி போடுவது நல்லது. வீடு, மனை வாங்கும் போது முறையான ஆவணங்களை சரிபார்த்த பின்பு வாங்குவது நல்லது.
 
20-10-2026 முதல் 22-12-2026 வரை குரு அதிசாரமாக சிம்மத்திற்கு வருவது உங்களின் ராசியை குரு இரு மாதம் பார்வை செய்கிறார். இந்த காலத்தில் உங்களுக்கு செய்து கொள்ள வேண்டிய காரியங்களை செய்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகள் சிறப்பாக அமையும். கருத்து வேற்றுமையுடன் இருந்தவர்கள் கருத்து ஒற்றுமையுடன் இருப்பார்கள். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். பொது விடயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். குறுகிய கால முதலீடு நல்ல லாபம் தரும். மீண்டும் வக்கிர குருவாக கடகத்தில் வருகிறார். இந்த காலத்தில் நீங்கள் மிகவும் கவனமுடன் இருப்பதுடன் யார் விடயத்திலும் தலையீடு இல்லாமல் உங்களின் காரியத்தில் மட்டும் கண்ணாகக் கொண்டு செயல்படவேண்டும். எதிர்காலம் செழிக்க உங்களின் தன்னம்பிக்கை உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்தும் குரு அருள் கிடைக்க பெறுவீர்கள். எதையும் சாதித்து காட்ட வேண்டும் என்பதை விட சோதித்து கண்காணித்து செயல்படுவதன் மூலம் வரும் துன்பத்தைத் தவிர்க்கலாம். பொருளாதாரத்தில் எந்த பிரச்சனையும் வராது.
 
பரிகாரம்:
 
வியாழன் தோறும் சொர்ண ஆகர்சண பைரவரை தரிசனம் செய்து நெய் தீபமிட்டு தாமரை மலர் ஒன்று வைத்து மனமுருக வேண்டிக்கொண்டு இனிப்பு நைவேத்தியம் வைத்து வழிபட எண்ணிய எண்ணம் ஈடேறும் சஞ்சலங்கள் உடனே தீரும்.