குரு பெயர்ச்சி பலன்கள் - 2026 - கடகம்
இன்றைய காலத்திற்கு தகுந்தபடி செயல்களை நிர்ணயம் செய்யும் கடக ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு ஆறாமிடம் ஒன்பதாமிடத்து அதிபதியான குரு பகவான் இனி வரும் 26-05-2026 முதல் ராசிக்கு ஜென்ம குருவாக உச்சம் பெற்று அமருகிறார். ராசியிலிருந்து ஐந்தாமிடத்தையும், ஏழாமிடத்தையும், ஒன்பதாமிடத்தையும் பார்ப்பது சுபிட்சமான காலமாக இருக்கும். ராசியில் உச்சம் பெறுவதால் சகல பாக்கியமும் கிடைக்க பெறுவீர்கள்.
விரைய குருவாக இருக்கும்போது எவ்வளவு வருமானம் வந்தாலும் அதற்கு தகுந்த செலவுகள் வந்து சேமிப்பு இன்றி இருந்த நிலைமாறி பொருளாதார பெருக்கம் உண்டாகும். ஜென்ம குரு என்பதால் மனரீதியான சில குழப்பம் உண்டாகும். எதையும் யோசிக்காமல் மனசஞ்சலம் அடைவீர்கள். சற்று நேரம் யோசித்து விட்டு நல்ல தீர்வு பெற்றவுடன் அமைதியாகி விடுவீர்கள். காலம் சரியாக பதில் சொல்லும் வரை சாத்திருக்காமல் உடனே செயலில் இறங்கி வேலை பார்ப்பீர்கள். குடும்ப பாரத்தை இறக்கி வைக்க நல்ல தீர்வு கிடைக்கும். குரு இருப்பதைவிட பார்க்குமிடம் சிறப்பு. பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுபெறும் போது தடைபட்ட காரியங்கள் செயல்பட துவங்கும். பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனைகள் பேசி தீர்க்கும் வாய்ப்பை பெறுவீர்கள்.
குரு பார்வையால் உங்களின் இழந்த சொத்துகளும், இழந்த பதவியும் மீண்டும் கிடைக்க வழி கிடைக்கும். ஏழாமிடத்தை குரு பார்க்க திருமண வாய்ப்புகள் கைகூடும். சரியான தீர்வுகளை நோக்கி பயணம் செல்வீர்கள். பலமுறை வரன் தேடியவர்களுக்கு இனி உடனே அமையும். கூட்டுத்தொழில் சிறப்பாக அமையும். நல்ல நண்பர்களின் சேர்க்கை உங்களுக்கு உறுதுணையாக அமையும். செய்யும் தொழிலை சிறப்பாக செய்து வளம் பெறுவீர்கள். இனி 20-10-2026 முதல் 22-12-2026 வரை இரண்டு மாத காலம் குரு அதிசாரமாக சிம்மத்திற்கு செல்வதால் வேக வேகமாக காரியத்தை முடிப்பீர்கள். அதிசார பலனால் கடகத்திற்கு எந்த காரியத் தடைகளும் வராது சிறப்பாக அமையும். அதன் பின்பு வக்கிரமாகிறார்.
வக்கிர குரு பூர்வ புண்ணிய பலன்களையும், பாக்கிய ஸ்தானத்தையும் பலம் பெற செய்வார். கொடுக்கல் வாங்கலில் இருந்த உறவுகள், நண்பர் பகை நீங்கி நட்பு கொள்வீர்கள். கணவன் - மனைவி நன்றாக இருக்கும். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். புனித நீராடுதல், புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வருதல், மத குருமாரிகளை சந்தித்து ஆசி பெறுதல் போன்ற நற்செயல்களுக்கு வாய்ப்பு அமையும். குலதெய்வ வழிபாடுகளும் குல தெய்வத்தை அறியாதவர்களை அழைத்து செல்வீர். வெளி விவகாரங்களில் தலையீடு கொள்வதை தவிர்த்து விடுவீர்கள். வாகன வசதிகளை பெறுவீர்கள். அரசியலிலும் பொது வாழ்விலும் உங்களின் செல்வாக்கு உயரும். சொந்த காலில் நிற்க செய்யும் தொழிலைவிருத்தி செய்ய நீங்கள் எடுக்கும் நல்ல முடிவுக்கு உதவி கிடைக்கும். ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி எடுக்க நேரிடும் தங்க நகை தங்கும். அடவு நகையை மீட்பீர்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவீர்கள். சின்ன உடல் உபாதைகளை மறந்து உடல்நலனை பேணி பராமரிப்பீர்கள்.
பரிகாரம்:
வியாழக்கிழமை தோறும் அதிகாலை முதல் தொடர்ந்து நவகிரக குருவுக்கு கொண்டைகடலை நைவேத்தியம் வைத்து நெய் தீபமேற்றி வணங்கிவர உங்களின் மனவலிமை சிறப்பாக இருக்கும். பொருளாதார வளர்ச்சி மேலோங்கும்.
















