மகா புண்ணியம் தந்திடும் திருகார்த்திகை தீப தரிசனம்!

மகா புண்ணியம் தந்திடும் திருகார்த்திகை தீப தரிசனம்!

கார்த்திகை மாதத்தில் ஜோதி வடிவாய் அருளும் லோகநாயகன் சிவபெருமானையும், கார்த்திகை மாதத்தில் அவதரித்த முத்தமிழ் காவலராம் முருகப் பெருமானையும் தீபங்கள் ஏற்றி வழிப்பட்டால் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டுமென்று புராணங்கள் செப்புகின்றன. 
 
தமிழ் மாதங்களில் சிறப்பு வாய்ந்ததாகக்கருதப்படுவது கார்த்திகை மாதம். கார்த்திகை என்று நினைத்த மாத்திரத்திலேயே, நினைவுக்கு வருவது அறியாமை எனும் இருளகற்றி ஞானம் எனும் ஒளியைத் தருகின்ற உலகெங்கும் இந்து மக்களால் இயற்றப்படுகின்ற தீப ஒளிகளும், திருவண்ணாமலையில் ஏற்றப்படுகின்ற திருவண்ணாமலை தீபமும் தான். நினைத்தாலே முக்தி தரும் புணியத்தலமான திருவண்ணாமலையில் ''மகா தீபம்” ஏற்றப்படுவது இக்கார்த்திகை மாதத்தில்தான். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், இவைகளைக் கொண்டு அமையப்பெற்றதே இந்தப் பிரபஞ்சம் ஆகும். பன்னிரு தமி்ழ் மாதங்களில் கார்த்திகை மாதம் மங்களகரமானதாகவும், திருமண மாதமென்றும் போற்றப்படுகின்றது. 
 
ஐம்பூதங்கள் கொண்டு அமையப் பெற்றதே இப்பிரபஞ்சம். ஆதிகாலம் முதற்கொண்டு தெய்வ வணக்கத்தின் தொடக்கமாக மனிதர்கள். இயற்கை வடிவங்களான பஞ்சபூதங்களையே வணங்கினர். இவற்றில் நெருப்பை தீபமாக அமைத்து அவற்றுள் ஈசனை ஜோதி வடிவில் கண்டு வழிபடும் மாபெரும் திருவிழாதான் “கார்த்திகை தீபத்திருவிழா”. இதை மகாதீப தரிசனம் என்றும் அழைப்பாளர்கள்.
 
ஆதிகாலம் முதற்கொண்டே தெய்வ வணக்கத்தின் தொடக்கமாக மனிதர்கள் இயற்கை வடிவங்களான பஞ்சபூதங்களையே வணங்கினார்கள். இவற்றில் நெருப்பை, தீபங்களாக வடிவமைத்து அவற்றுள் ஈசனை ஜோதி வடிவில் கண்டு வழிபடும் மிகப்பெரிய திருவிழா தான் “கார்த்திகை தீபத்திருவிழா” என அனைத்து இந்து மக்களாலும் பக்திப் பெருக்கோடு கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தில், திருக்கார்த்திகைப் பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலையில் ஏற்றப்படுகின்ற மகாதீபத்தைக் காண்பதும், அன்றைய தினம் திருவண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வருவதும் மானிடராய்ப் பிறந்தவர்க்கு மகாபுண்ணியத்தை அளிக்கவல்லதும், செய்த பாவங்கள் களையப்படுகின்ற அற்புதத் தருணம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இந்த அற்புத மலையின் அருமையும் பெருமையும் வாயாலும் எழுத்தாலும் விவரிக்க முடியாததாகும்.
 
ஆயிரக்கணக்கான ரிஷிகளும், சித்தர்களும் இப்புண்ணியத் திருத்தலமான திருவண்ணாமலையில் வந்து தங்கி ஈசனின் திருவடிகளில் தவமிருந்து மெய் ஞானம் பெற்று, உலகுக்கு நல்வழி காட்டி சைவசிந்தாந்த நெறிகளைப் பரப்பி தானும் முக்தியடைந்திருக்கிறார்கள் என்றால், திருவண்ணாமலையார்  அபீதகுஜாம்பிகையின் திருவருட்களையும் நாம் நன்குணரலாம். ஒரு சமயம் பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் தம்முள் உயர்ந்தவர் யார் என்னும் வாதம் தோன்றிய போது, அவர்களுக்காக ஆதியும் அந்தமும் அற்ற அடியும் முடியும் காணமுடியாத, வானத்தையும் பூமியையும் ஒன்றாய் தொடுகின்ற உலக சோதியாய் காட்சி தந்த சிவபெருமான் பிரம்ம  விஷ்ணுவின் உயர்வு தாழ்வு எனும் அஞ்ஞானத்தைப் போக்கினார். சிவன் சோதியாய் காட்சி தந்த அந்தத் திருநாளே “திருக்கார்த்திகை தீபத்திருநாளாக இன்று உலகெங்கும் உள்ள இந்துக்களால் பக்திச்சிரத்தையோடு கொண்டாடப்படுகிறது. 
 
ஈசனின் நெற்றிக்கண்ணிலே அவதரித்த தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை அன்போடு எடுத்து வளர்த்த ஆறு கார்த்திகைப் பெண்களையும் நினைவு கூறுகின்ற வகையிலும் கார்த்திகைத் திருநாள் பரணி தீபமாகக் கொண்டாடப்படுகின்றது. சங்க காலத்துக்கு முன்பிருந்தே, பல நூறு ஆண்டுகளாக கார்த்திகைத் திருநாள் ஒரு மிகச் சிறந்த தமிழ் பண்டிகையாக, விழாவாக அனுஷ்டிக்கப்படுவதை சங்க காலத்து வரலாறுகள் தெரிவிக்கின்றன. 
 
புராண வரலாறுகளும் கார்த்திகை மாதத்தின் சிறப்புக்களையும் வெகுவாக வர்ணித்துள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை நாம் அறிந்து கொண்டால், கார்த்திகை மாதத்தில் நாம் அடையக் கூடிய புண்ணிய பலாபலன்களை விரத வழிபாடுகளின் மூலமாக அடைந்து தெய்வ அனுக்கிறகங்களைப் பெற்றிடலாம், வாழ்வில் நலமடையலாம். கார்த்திகை மாதத்தில் தினமும் அதிகாலையில் எழுந்து, சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், உலகின் எல்லா புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன்களைப் பெறுவார்கள். கார்த்திகை மாதத்தில் சைவ உணவை மட்டுமே உண்டு விரதம் மேற்கொள்பவர்கள் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். 
 
கார்த்திகை மாதத்தை ஒளி பொருந்திய மாதமாக்கும் எத்தனிப்பாக, ஏழை எளியோர்க்கு எதனாலாவது உருவாக்கப்பட்ட விளக்குகளை தானமாக வழங்கி கூடுதல் ஒளிக்குக் காரணமாக இருக்கும் பட்சத்தில் “பிரம்மஹத்தி” முதலான கொடிய தோஷங்களும் நம்மைவிட்டு அகன்று விடும். அதேபோல் நமது இல்லங்களிலும், திருக்கார்த்திகைத் திருநாளன்று அதிக அளவில் தீபங்களை ஏற்றி வழிபட்டால் புண்ணிய பலன் கிடைக்கும். கார்த்திகைப் பவுர்ணமியன்று முறையாக உமாமகேஸ்வர விரத்தைக் கடைபிடித்தால் தேவர்களுக்குக் கிடைக்கக் கூடிய அரிய புண்ணிய பலன்களும், இம்மையில் சகல செல்வங்களும் மறுமையும் முக்தியும் கிட்டும் என்று உபதேச  புராணத்திலும், திருப்புராணத்திலும் விவரித்துச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் கார்த்திகை மாதத்தில் பெருமாளை ஒவ்வொரு நாளும் மலர் கொண்டு பூசிப்பவர்கள் வீடுபேற்றையும் துளசி இலை கொண்டு அர்ச்சிப்பவர்கள், ஒவ்வொரு துளசி இலைக்கும் ஒரு அஸ்வமேதயாகம் செய்த பயனையும் அடைவார்கள்.
 
இராமலிங்க அடிகளார் “ஒளியின் வடிவம் சிவம்” என்று போற்றி அருட்பெருஞ்சோதி பாடினார். நாயன்மார்களில் ஒருவரான அப்பர், நமசிவாய வடிவமே ஒளி வடிவமானது என்கின்றார். கிருஷ்ணபகவான் கீதோபதேசத்தில், விளக்கின் ஒளி போன்று மனதை அசையாமல் இறைவழிபாட்டில் ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார். திரிசங்கு மன்னன் இழந்த நாட்டையும், பெருமையையும் கார்த்திகை தீப விரதமிருந்தே திரும்பப் பெற்றான் என்கின்றது புராண வரலாறு.
 
திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று, இல்லங்களில் வழிபாடு செய்யும்போது, முதலாவதாக ஆதிமுதற் கடவுளான விநாயகப்பெருமாளை வணங்கி, வீடெங்கிலும் தீபங்கள் ஏற்றி வழிபடலாம். கார்த்திகை நட்சத்திற்கு உரிய அதிர்ஷ்ட தேவதை அக்னி ஆகும். மேலும் பஞ்ச  பூதத்தலங்களுள், திருவண்ணாமலை மகேசன் குடிகொண்டுள்ள அக்னி தலமாய் போற்றப்படுகிறது. ஆகவே தான் கார்த்திகை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி தினத்தன்று பகவானுக்கு தீபமேற்றி வழிபடுவது மகா புண்ணியமாகக் கருதப்படுகிறது. 
 
இல்லம் தோறும் குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றிவைத்தால் அங்கு லட்சுமி கடாட்சம் ஏற்படும் என்றும், விளக்கின் ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத்தன்மை, அன்பு ஆகிய நற்குணங்களைக் குறிக்கின்றன என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் பத்து நாட்களுக்கு தீபத்திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நாமும் திபஒளியில் இறைவனைக் கண்டு நல்லருள் அடைவோமாக!
 
ஜெயா நாகேந்திரன்