ஆன்மா ஈடேறும் வழி அன்னதானமே
உலகத்திலுள்ள மக்கள் வீடுபேறடைவதற்குச் சாதனமாக இருந்து உபகரிப்பது அறம் ஒன்றேயாம். நாம் சம்பாதித்த பொருள் இந்த சென்மத்தில் மட்டும் உதவி செய்யும். நாம் செய்யும் அறமோ மறுமைக்கும் வந்து உதவி செய்யும்.
“ஓங்கார வேலையில் வேலைவிட் டோனருள்போலுதவ
எங்காயினும் வரும் ஏற்பவர்க் கிட்டது; இடாமல் வைத்த
வங்கார மும் உங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்
சங்காத மோகெடு விருயிர் போமத் தனி வழிக்கே”
என்று நம் பரமாசாரிய மூர்த்திகளாகிய அருணகிரிநாத சுவாமிகள் உபதேசித்துள்ளார். எத் தேசத்தில், எக்குலத்தில், எந்தப் பிறப்பில் பிறந்தாலும் நாம் இப்பொழுதுஇங்கு செய்யும் அறம் பின்தொடர்ந்து வரும். அதனாலன்றோ ஔவைப் பிராட்டியார் நமக்கு உபதேசிக்க வந்த போது முதலில் “அறஞ்செய விரும்பு” என்று வற்புறுத்தியுள்ளார். அந்த அறமாவது பலதிறப்பட்டுள்ளது.அவற்றில் தானம், தருமம் என்ற இருவகை சிறந்து விளங்குகின்றன. இந்த இருவகையில் முதலாவதாக நின்ற தானத்தில் பூதானம், கோதானம், வஸ்திரதானம், கன்னிகா தானம், சுவர்ணதானம் எனப்பலப்பல கிளைகளுண்டு. இவற்றுள் தலைசிறந்து விளங்குவது அன்னதானம் ஒன்றேயாகும். இதனை எல்லாச் சமயத்தவரும். எத்திறப்பட்டோரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதற்குச் சமமானது முன்னுமில்லை, பின்னுமில்லை. எதனால் அன்னதானம் உயர்ந்தது என்பதைச் சிறிது ஆராய்வோம்.
உயிர்கள் அன்னத்தைத் தான் முக்கிய ஆதாரமாகக் கொண்டு வாழ்கின்றன. பசித்தோருக்கு அன்னத்தைக் கொடுத்தால் உயிரைக் கொடுத்தது போலாகும்.
குஷ்டம், சூலை முதலியவைகளில் எத்துணைக் கொடிய நோய் ஒருவனுக்கு வந்து வருத்தினாலும், சில காலமாவது உயிர் வாழலாம். பசி என்னும் கொடிய நோய் ஒருவனுக்கு வந்து சேர்நதால் சிறிது நேரமாவதுஉயிர் வாழ முடியுமா? பசி நோய் வந்த காலத்து எவ்வளவு சிரமம் உண்டாகிறது? கண் பஞ்சமடைகிறது. காதடைக்கிறது. தலை சுற்றுகிறது. வயிறு ஒட்டிப்போகிறது. கால்கள் தடுமாறுகின்றன. அகக்கருவிகளாகிய மனஞ் சோர்வையடைகின்றன. புத்தி தடுமாறுகிறது. உயிர் துடிக்கிறது. கருவி கரணங்களெல்லாம் தத்தஞ் செயல்களினின்றுந் தவிக்கின்றனவல்லவா? அத்தகைய கொடிய பசியை ஆற்றுவதைக் காட்டிலும் சிறந்த தருமம் மூன்று உலகத்திலும் கிடையாதென்பது உறுதி. பசியென்றும் நோயை அன்னம் என்கிற மருந்தைக் கொடுத்து நீக்க வேண்டும். பசியால் களைத்து வந்தவனுக்குச் சிறிது அன்னங்கொடுக்க அதை அருந்தியவுடனே அவன் முகம் எவ்வளவு பொலிவுடைகிறது. மனம் எவ்வளவு ஆனந்தத்தையடைகிறது? ஆன்மா எவ்வளவு சாந்தியடைகிறது. சிந்தியுங்கள். அப்போது அன்னம் கொடுத்தவனுக்கு எவ்வளவு புண்ணியம் உண்டாகிறது? பசியாற்றுவதைக் காட்டிலும் சிறந்த தவம் வேறு இல்லை.
ஒருவனுக்குப் பசிப்பிணி நான் போய் ஒருவரை ஒன்றுங் கேட்கமாட்டேன். “ஏற்பதிகழ்ச்சி” என்று சொல்லிக் கொண்டிருந்த மானமும் நீங்குகிறது. நான் உயர்ந்த குலம், ஆசாரத்திற் சிறந்தவன், அவன் தாழ்ந்தவன் என்று பாராட்டுகிற குலமும் நீங்குகிறது. கல்வி கேள்விகளிற் சிறந்து நுண்ணிய மதியுடன் திகழ்கின்றோரது கல்வி அறிவும் மங்குகிறது. காண்பார்களதுகண்களைக் கவரும் கட்டழகும் குன்றுகிறது. பொருளுடையோன் என்கிற பெருமிதமும் பெயர்கிறது. தானம் புரிகின்ற தன்மையும் தவிர்கிறது. உணர்ச்சியும் ஒழிகிறது. தேன் போன்ற இனிய சொற்களையுடைய மாதர் மேல் மனத்தை வைத்து கங்குல் பகலாய்க் கண் துஞ்சாது கவங்குகின்ற காம வேட்கையும் கடிதில் விலகுகிறது.
மானங்குலங் கல்விவண்மை அறிவுடைமை
தானந் தவமுயர்ச்சி தாளாண்மைதோனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்துபோம் - ஔவைப் பிராட்டியார்
பசி இன்னும் என்னென்ன விபரீதங்களையுண்டு பண்ணுகிறது. அரிதிற் பெற்ற பளிள்ளையை விற்கச் செய்கிறது. தவமிருந்து பெற்ற பிள்ளையைத் தூக்கிக் கல்லின் மேலறையச் செய்கிறது. எல்லாம் கடந்த ஞானிகளாக காட்டிலிருந்து கருத்தை யொடுக்கிக் கனலிடை நின்று கடுந்தவமியற்றும் முனிவர்களையும் கூட காயோ கனியோ கந்த மூலங்களோ இலையோசருகோ கிடைக்குமா என்று தோடி உண்ணச் செய்கிறது. முற்றுத் துறந்தவரையும் வீடுதேடி பிச்சை வாங்கச் செய்கிறது. விரமுங் கிடையாது. பலமுங் கிடையாது என்று விரத நாளினுங்கூட மூன்று வேளை தலையணைக்குப் பஞ்சடைக்கிற மாதிரி வயிற்றில் சோற்றைத் திணிக்கச் செய்கிறது. விரதமிருக்கிறவர்களை பல ஆகாரங்களாகப் பழமாகப் பாலாக வயிறுபுடைக்க உண்ணச் செய்கிறது. சிவபெருமானால் உபதேசிக்கப் பெற்ற பட்டினத்தடிகளும் பசியால் வாடி ஒருவன் வீட்டிற்கு உணவை நாடிச் செல்ல நேர்ந்தது. அவன் சுவாமிகளைத் துன்புறுத்த அக்கால் சுவாமிகள் மனம் வருந்தி,
பூணும் படிக்கல்ல பொன்னுக்குத் தானல்ல பூமிதனைக்
காணும் படிக்கல்ல மங்கையர்க் கல்லநற்காட்சிக்கல்ல
சேனுங் கடந்த சிவனடிக் கல்லவென் சிந்தை கெட்டு
சாணும் வளர்க்கஅடியேன்படுந்துயர் சற்றல்லவே”
என்று கூறியுள்ளார். அருணகிரி சுவாமிகளும் “நீள்பசியவிக்கக் கனபானம் வேணும்” என்றனர். வேறொரு வழியின்றி பசி தாகத்தால்மெலிந்தவர்களை அன்போடும் அருளோடும் அன்னமீந்து ஆதரிக்க வேண்டும். நிலத்தில் ஒரு விதை விதைத்தால்அது ஒன்றுக்கு ஆயிரமாக விளைகிறதல்லவா? அது ஒன்றுக்கு ஆயிரமாக விளைகிறதல்லவா? அது போல் ஏழைகள் வயிற்றில் கொடுத்த அன்னம், மறுமைக்கு ஆயிர மடங்காகப்பெருகி நமக்கு நன்மையை நல்குகிறது. சென்ற வருடத்தில் விளைவித்த தானியத்தையல்லவா இப்போது உண்ணுகிறோம். அதுபோல முன் ஜென்மத்தில் செய்த நன்மையினால் நாம்இப்போது சுகத்தை அனுபவிக்கிறோம்.இப்போதும் நன்றாகப் பயிரிட்டு விளைவித்தால் அல்லவா. அடுத்த வருடத்தில் கவலையற்றிருக்கலாம். இப்போதும் நாம் நன்மையைச் செய்தாலல்லவா மறு பிறவியில் சுகம் பெறலாம். நாம் எவ்வளவொ பாடுபட்டு செல்வத்தைத் தேடுகிறோம். அங்ஙனம் உடல் வருந்தி சேகரித்த பொருளை இவ்விடத்திலேயே வைத்து விட்டுப் போகலாமா? அந்தச் செல்வத்தை நல்ல சேமநிதி நிலையத்தில் (பண்டாபீஸ்) போட்டு வைத்தால் நாம் போகும் இடத்திற்கு அது உதவுமல்லவா? இப்போது நாம் தேடிய பொருளை சேமித்து வைக்க வேண்டிய இடம் யாது? எங்கு வைத்தால் ஒன்றுக்கு ஆயிரமாக வரும்? என்று ஆராய்ந்து பார்த்தால் அடியார்கள், ஏழைகள் வயிறுதான் நல்ல சேமநிதி நிலையம் (பண்டாபீஸ்). அதற்கு தலைவர்தரும தேவதை. அது எப்பொழுதும்கெடாது.ஆனால் ஏழைகள் வயிற்றில் பணமாகப் போட முடியுமா? முடியாது.
பின்னர் என்ன செய்ய வேண்டும்? அன்னமாக மாற்றிப் போடவேண்டும். அப்படிப் போட்டு வைத்தால் அது பிறவிகள் தோறும் தொடர்ந்து கொண்டே வரும். ஆன்ம திருப்தியையுண்டு பண்ணுவது அன்னதானம் ஒன்றேயாம்.
- திருமுருக கிருபானந்தவாரியார்