அமெரிக்காவின் லன்ஹாமில் சிவ-விஷ்ணு ஆலயம்
வெளிநாடுகளில் வாழும் இந்து சமய மக்களின் ஆன்மீக தேடலுக்கு விடை பகர்வதாக உள்ளவை ஆலயங்கள் தான். கல்வி, தொழில், வியாபார நிமித்தமாக தம்முடைய சொந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்து மக்களுக்கு ஒற்றுமையையும் ஆத்ம திருப்தியையும் கூட்டு வழிபாட்டிற்கான அருமையான சந்தர்ப்பங்களையும் வழங்கக் கூடியதும் ஆலயம் தான். எனவே தான், வெளிநாடுகளில் வாழும் இந்து சமயத்தை தழுவிய மக்கள் ஒன்று கூடி தாங்கள் வாழ்கின்ற இடத்திலேயே நல்லதொரு ஆலயத்தை எழுப்ப முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்று விடுகின்றார்கள். இப்படியானதொரு ஆலயம் தான் அமெரிக்காவின் லன்ஹாம் என்ற இடத்தில் அமைந்துள்ள சிவவிஷ்ணு ஆலயம்.
லன்ஹாமில் நல்லதொரு இந்து ஆலயத்தை அமைத்திடல் வேண்டுமென்ற விதையினை 1976-ம் ஆண்டில் இங்கு வசித்து வந்த மக்கள் தங்களின் இதயங்களில் விதைத்தார்கள். இவர்களின் பெருமுயற்சியின் காரணமாக 1980-ம் ஆண்டு ஸ்ரீ சிவவிஷ்ணு ஆலய அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் நோக்கமானது, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து லன்ஹாமிற்கு வந்து பல்வேறு வேலைகள் நிமித்தம் குடியேறியிருக்கும் மக்களின் தெய்வ வழிபாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதே முதன்மையானதாக இருந்தது. இந்த பகுதியில் வாழும் மக்கள் அனைவரையும் ஒன்று படுத்துவதற்காகவும் அவர்கள் வெவ்வேறு பழக்கவழக்கங்களை கொண்டிருந்த போதிலும் தெய்வ வழிபாடு மற்றும் அதன் பெருமைகளை உணரும் பொருட்டும் சிவவிஷ்ணு ஆலயம் அமைக்க வேண்டுமென்பது நோக்கமாக அமைந்திருந்தது. அத்துடன் இங்கிருந்த இந்து மக்களுக்கு இந்து மதத்தின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் குழந்தைகள் உள்பட முழு குடும்பத்திற்கும் பயன்படும் வகையில் இந்த ஆலயம் அமைந்திருக்க வேண்டுமென்பதும் எண்ணமாக இருந்தது. தொடர் முயற்சி மற்றும் நடவடிக்கைகளின் காரணமாக 1984-ம் ஆண்டு ஸ்ரீ சிவவிஷ்ணு ஆலய அறக்கட்டளை அந்த பகுதியில் நல்லதொரு இடத்தை ஆலயம் அமைத்திட பெற்றது. இங்கு தான் ஸ்ரீ சிவவிஷ்ணு ஆலயத்தின் முதல் நடவடிக்கையாக சில தெய்வ விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
ஆலயத்திற்கென கையகப்படுத்தபட்ட இடத்தில் எல்லா தெய்வங்களுக்குமான சிலைகளை ஆகம விதிகளின் படி சிறப்பாக பிரதிஷ்டை செய்து ஆலயத்தை மிகச் சிறந்த வழிபாடுகளுடன் திறம்பட நடத்த வேண்டுமென்று அறக்கட்டளை உறுப்பினர்களும் அங்கிருந்த பக்தர் பெருமக்களும் பெரிதும் விரும்பினார்கள். எனவே ஆலயத்திற்கான பாரம்பரிய கட்டுமான பணிகளுடனும் விதிமுறைகளின்படி உருவாக்கப்பட்ட விக்கிரகங்களையும் ஸ்தாபிதம் செய்ய வேண்டும் என்று அனைவரும் ஆவல் கொண்டார்கள்.
1990-ம் ஆண்டில் கிட்டத்தட்ட அனைத்து விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு புனித நீருடன் பூஜைகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு ஆலயத்தின் முதல் கும்பாபிசேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. ஆலயத்திற்காக அறக்கட்டளையின் முயற்சியின் பேரில் கூடுதல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வெங்கடேஸ்வவரர் மற்றும் ஐய்யப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அடுத்ததாக 2002-ம் ஆண்டின் நடத்தப்பட்ட ஆலய கும்பா பிசேகத்திற்கு முன்பாக ராஜகோபுரமும் வசந்த மண்டபமும் அழகிய சிற்ப வேலைப் பாடுகளுடன் செய்து முடிக்கப்பட்டன.
ஆலயத்திற்கு தேவையான ஓடிட்டோரியமும், உணவு உண்ணும் அறையும், ஓமகுண்டத்திற்கான வசதிகளும் 2003-ம் ஆண்டில் நல்ல முறையில் செய்து முடிக்கப்பட்டன. நாட்டியம், இசை கச்சேரி மற்றும் சொற்பொழிவுகள் நடத்துவதற்கு ஆலயத்தின் ஓடிட்டோரியம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அமைக்கப்பட்டிருந்த இரண்டு ஹோம குண்டங்களில் ஒன்று பக்தர்களின் சிறப்பு வழிபாடுகளுக்காகவும் மற்றொன்று ஆலய பயன்பாட்டிற்காகவும் செய்யப்பட்டிருந்தது.
லன்ஹாமில் வசித்து கொண்டிருக்கும் இந்து சமய மக்களுக்கு திருமணம் மற்றும் இதர குடும்ப விசேசங்களை நடத்துவதற்கும் ஆலயத்தின் ஓடிட்டோரியம் பயன்படுகிறது.
இந்த ஆலய விழாக்கள் குறைவின்றி நடைபெற தன்னார்வு தொண்டர்களும் ஆலயத்தின் பணியாளர்களுடன் மிகச் சிறந்த முயற்சிகள் மேற்கொள்கின்றார்கள். ஆலய பணிகளை மேற்கொள்வதற்காக நிர்வாக பணியாளர்களும் எட்டு அர்ச்சர்களும் தங்களின் சிறந்த சேவைகளை தந்து அப்பகுதியின் இந்து இன மக்களின் ஆன்மீக தேவைகளை அற்புதமாக பூர்த்தி செய்து வருகிறார்கள். லன்ஹாமில் ஸ்ரீசிவ-விஷ்ண ஆலயத்தில் சிவன், விஷ்ணு, விநாயகர், முருகன், மற்றும் ஐய்யப்பன் ஆகியோரது சன்னதிகளும் உள்ளன. இவ்வாலயத்தில் செய்யப்பட்டுள்ள விக்கிரக ஸ்தாபிகளும் இதர ஆன்மீக வேலைகளும் புகழ் பெற்ற கணபதி ஸ்தபதியாரின் மேற்பார்வையில் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
லன்ஹாமின் ஸ்ரீசிவ-விஷ்ணு ஆலயமானது இங்கு வசித்து வரும் பக்தர்களுக்கு வழிபாட்டிற்குரிய தலமாகவும், கலாச்சார பண்பாட்டு மையமாகவும் விளங்கி வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
அபிதா மணாளன்