ஆயுர்வேத மருத்துவத்தின் முன்னோடியாய் பரிணமித்த ஸுஸ்ருதா மகரிஷி!
அகத்திய முனிவர், திருமூல மகரிஷி போன்ற புராண காலத்து ரிஷி புங்கவர்கள் இறைவழிபாட்டையும் தவத்தையும் தம் பிறவி பயனாய் மேற்கொண்டதோடு, உலக சேமத்திற்காக வருங்கால சந்ததியர்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்காக பல அரிய மருந்துகளையும் மருத்துவ முறைகளையும் கண்டுபிடித்து எழுதி வைத்துள்ளார்கள். குறிப்பாக திருமூலர் தமது நூற்றுக்கணக்கான மருத்துவ நூல்களின் மூலமாக மனித சமுதாயம் பயன் பெற எண்ணற்ற பல மருந்துகளை மூலிகை ஆராய்ச்சிகளின் மூலமாக கண்டுபிடித்து எழுதி வைத்துள்ளார். இந்த வரிசையில் மனித இனத்திற்கு பயன்படும் ஆயுர்வேத மருத்துவத்தின் முன்னோடியாய் ஸுஸ்ருதா மகரிஷி விளங்கியிருக்கின்றார்.
வடமொழியில் ஸுஸ்ருதா என்ற சொல்லுக்கு “நன்கு கேட்கப்பட்டது” என்ற பொருள் கிடைக்கின்றது. ஸுஸ்ருதா மகரிஷியின் மருத்துவ புகழுக்கு காரணமாய் இருப்பது அவரால் எழுதப்பட்ட “ஸுஸ்ருதா சம்ஹிதா”. இந்தியாவின் மிக பழைமையான காவியமான மகாபாரதத்தில் விஸ்மாத்திர மகரிஷியின் குமாரரே ஸுஸ்ருதா மகரிஷி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஞ்சாலால் பிசகிரந்தா என்னும் எழுத்தாளர், ஸுஸ்ருதா மகரிஷி விஸ்வாமித்திர மகரிஷியின் வம்சத்தைச் சேர்ந்தவர் என்று எடுத்துக் கொள்வது தான் மிகவும் நலமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார். பண்டைய கால மகரிஷிகளால் படைக்கப்பட்ட மருத்துவ நூல்களில், ஸுஸ்ருதா சம்ஹிதா ஒரு மிகச் சிறந்த மற்றும் ஒரு முக்கியமான புராண காலத்து மருத்துவ நூலாக போற்றப்படுகின்றது. மேலும் இந்த நூலானது ஆயுர்வேத மருத்துவத்திற்கு அடிப்படையாகவும் ஆதாரமாகவும் விளங்குகின்றது. இந்த நூலில் மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் மிகச் சிறந்த மருந்துகள் சொல்லப்பட்டுள்ளன. மேலும் இந்த நூலில் மருந்துகளால் உடனடியாக குணப்படுத்த முடியாத நோய்களுக்கு அறுவை சிகிச்சைகளும் மிகுந்த அளவில் தகுந்த பாதுகாப்பு ஆலோசனைகளுடன் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நூலை மொழிபெயர்த்த ஜி.டி.சிங்கால் என்பவர், ஸுஸ்ருதா சம்ஹிதாவின் ஈடு இணையற்ற கட்டமைப்பைப் பற்றி பெரிதும் புகழ்ந்துள்ளார். இந்த நூலில் அறுவை சிகிச்சைகள் பற்றிய விரிவான மற்றும் மிகச் சரியான யுக்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஸுஸ்ருதா மகரிஷியை ஜி.டி.சிங்கால் “அறுவை சிகிச்சையின் தந்தை” என்றே புகழ்கின்றார். ஸுஸ்ருதா மகரிஷியின் மருத்துவ ரீதியான அறுவை சிகிச்சை உபயாங்கள் மற்றும், அதி உன்னதமான கண்டுபிடிப்புகளுக்காக அவரை இந்த உலகின் “முதல் பிளாஸ்டிக் சர்ஜன்” என்றும் அழைத்தார்கள். மருத்துவ அடிப்படையிலான இந்த பெருமை அந்த காலகட்டத்தில் கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலும் கடின உழைப்பின் அடிப்படையிலும் ஸுஸ்ருதா மகரிஷிக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றது. இவை அனைத்தும் இந்த மகரிஷி மனித இனத்தின் மீது கொண்டிருந்த அலாதி அன்பையும் பாசத்தையும் எடுத்துரைப்பதாக அமைந்தன.
ஸுஸ்ருதா மகரிஷிக்கு மருத்துவத்தின் மீது மாறாத பிடிப்பும் கண்டுபிடிப்புகளுக்கான உந்துதலும் ஏற்பட்டது அப்போது வாராணாசியில் அரசராக இருந்த திவோதசா என்பவரால் தான் என அறியப்படுகின்றது. மேலும் அரசர் திவோதசா மருத்துவ கடவுளான தன்வந்திரியின் வழித் தோன்றலாக விளங்கினார் என்றும் சொல்லப்படுகின்றது. அப்போதைய பேரறிவுப் படைத்த கனவானான ருடால்ப் ஹொர்னே என்பவர் ஸுஸ்ருதா சம்ஹிதாவில் காணப்படுகின்ற பல விடயங்கள் 6-ம் நூற்றாண்டைச் சார்ந்த சதபாத பிரம்மாவிலும் காணப்படுகின்றது என்ற கருத்தை தெரிவித்திருக்கின்றார். இருந்த போதிலும் கடந்த நூற்றாண்டில் மருத்துவ இலக்கியமானது மிகப் பரந்த அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. ஸுஸ்ருதா சம்ஹிதா ஸுஸ்ருதா மகரிஷிக்கு பின்பாகவும் சிலரது முயற்சியின் காரணமாக மேம்படுத்தப்பட்டது என்றும் இதன் கடைசி அத்தியாயமானது “உத்திர தந்த்ரா” என அழைக்கப்படுகின்றது எனவும் வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. இன்றைய மருத்துவ உலகத்திற்கும் கூட ஸுஸ்ருதா மகரிஷியின் அற்புதமான கண்டுபிடிப்புகள் ஏதோ ஒரு வகையில் அடிப்படையாகவே இருந்து வருகின்றது.
ஸுஸ்ருதா மகரிஷியினால் உருவாக்கப்பட்ட மருத்துவ நூலான ஸுஸ்ருதா சம்ஹிதாவில் மொத்தம் 184 அத்தியாயங்களும், 1120 நோய்களுக்கான சிகிச்சை விளக்கங்களும் 700 மருத்துவ மூலிகைகள் பற்றியும், 64 தாது பொருள் தயாரிப்புகள் பற்றியும் மற்றும் 57 மிருகங்கள் தொடர்பான மருந்து தயாரிப்புகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் அறுவை சிகிச்சை பற்றிய உத்திகள் பெரிய அறுவை சிகிச்சைக்காகவும், மருத்துவ கீறல்களுக்காகவும் கண்டுபிடிப்புகளுக்காகவும், அன்னிய பொருள் வெளி கொணர்வதற்காகவும், பல் பிடுங்குவதற்காகவும், கட்டிகள் வெட்டி வெளியே எடுப்பதற்காகவும் இன்னும் பலவும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மருத்துவ நூலில் ஆறு விதமான எலும்பு பிசகல்கள், 12 விதமான எலும்பு முறிவுகள் பற்றியும் மற்றும் எலும்புகளின் அமைப்புகள் பற்றியும் விபத்து ஏற்படும் போது அவற்றை எவ்வாறு மறு சீரமைக்க வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது நம்மை இன்றும் ஆச்சரியப்பட வைக்கின்றது. ஸுஸ்ருதா மகரிஷி தம்முடைய மருந்து கண்டுபிடிப்புகளில் ஆயுர்வேத முறைகளை கையாண்டுள்ளதால் பக்க விளைவற்ற நல்ல மருத்துவத்திற்கு இவர் அன்றே அடிகோலியுள்ளார் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.
- S.ஆகாஷ்