மனதை வசமாக்கும் இரண்டு வழிகள்!

மனதை வசமாக்கும் இரண்டு வழிகள்!

மனதை நம் வசமாக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன.

 
1. நமது சரீரத்தில் உள்ள உறுப்புக்களை நமது சித்தத்துக்கும் எண்ணத்துக்கும் ஏற்ப அசைக்கும் அப்யாசம்.
 
2. நமது மனதில் தோன்றும் எண்ணங்களை நமது சிந்தனைக்கு இணங்க ஒழுங்குபடுத்தும் அப்யாசம்.
 
இந்த அப்யாசங்கள் ஆரம்பத்தில் சிறிது கஷ்டமாகத்தான் தோன்றும். ஆனாலும் நமத தேவைகளைப் பூர்த்தி செய்து நாம் வளமான வாழ்வு வாழ இவையே ஆதாரமாக இருப்பதால் இவைகள் பழகப் பழக சரியாகிவிடும். கஷ்டம் தெரியாது.
 
இதனால்தான் நம் ஞானிகளும் மகான்களும் மந்திரச் சொற்களை ஆயிரக் கணக்கில் உரு ஏற்றி ஜெபித்து வர வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். மனதில் வேறு எண்ணங்கள் தோன்றாமல் ஒன்றையே திரும்பத் திரும்ப உருப்போட்டு வரும் போது வெளிமனம் அடங்கி நமது எண்ணப்படி மந்திரங்களில் சொல்லியிருக்கும் வேண்டுதல்களின்படி நமது மனம் செயல்பட ஆரம்பித்து விடுகிறது.
 
ஆகவே சித்த புருஷர்களும் மகான்களும் தங்களுக்கு வேண்டியதை அடைந்தும் நினைத்ததை நடத்தியும் செயல்படுத்தி வந்தது இந்த மனோசக்திகளாலேதான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
 
மனதில் அசைக்க முடியாத ஒரு திட நம்பிக்கை ஏற்படுத்துவதே இந்த மந்திரச் சொற்களின் வேலையாகும்.
 
வழிமுறைகள்:
 
ஒரு இடத்தில் அமைதியாக உட்காருங்கள். கால்களை மடக்கி சவுகரியமாக உட்கார்ந்து கொண்டு இரு தொடைகளின் மேலும் இரு கைகளையும் மலர்த்தி அதாவது உள்ளங்கை விரித்து மேல் நோக்கி இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் ஒவ்வொரு கையிலும் உள்ள விரல்களை ஒவ்வொன்றாக மெதுவாக மடக்கவும். இது போல விரல்களை மடக்கிக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் எண்ணத்தைச் சிதற விடாமல் முழுகவனத்தையும் விரல்களின் மேல் செலுத்தி மடக்குவதில் லயித்து இருக்கவும்.
 
ஒரு கையில் உள்ள விரல்களை மடக்கிய பிறகு மற்றொரு கையில் உள்ள விரல்களையும் ஒவ்வொன்றாக மடக்கவும். உங்கள் எண்ணத்தை விரல்களை மடக்குவதின் மேலயே வைத்து இருக்க வேண்டும். எண்ணங்களை வேறெங்கும் சிதறவிடக்கூடாது.
 
இதன் பிறகு விரல்கள் மேலேயே கவனத்தை வைத்துக் கொண்டு ஒன்று முதல் பத்து வரை எண்ணி அடிப்படியே லயித்து இருந்து விட்டு பிறகு ஒவ்வொரு விரலாக ஒன்று முதல் பத்து வரை எண்ணி விரிக்கவும்.
 
இதுபோல விரல்களை மடக்கி வரும் போதே ஒன்று முதல் பத்துவரை எண்ணி எண்ணத்தை அதிலே லயிக்கவிட்டு மடக்கிய பின்பு பத்து வரை எண்ணி அதன் பின் ஒவ்வொரு விரலாக விரிக்கும் போது ஒன்று முதல் பத்து வரை சொல்லி விரித்து வரவும்.
 
இந்த அப்யாசம் மிக எளிமையாகத் தெரிந்தாலும் மனதை இதில் லயித்து விரல்களை மடக்கியும் விரித்தும் ஒன்று முதல் பத்து வரை எண்ணி வரும் போது மூன்று விதமான எளிய கிரியைகளைச் செய்கிறீர்கள்.
 
ஒன்று, பார்வையையும் எண்ணத்தையும் விரல்கள் மேல் லயிக்க வைத்து விடுகிறீர்கள். இரண்டாவது, ஒன்று முதல் பத்து வரை உணர்வுடன் அதில் லயித்து சொல்லி மடக்குகிறீர்கள்.
 
மூன்றாவது, ஒன்று முதல் பத்து வரை எண்ணி ஒவ்வொரு விரலாக விரிக்கிறீர்கள்.
 
இதனால் மனதை எளிதில் கைகளில் லயிக்க வைத்து பத்து தடவை இந்த அப்யாசத்தை தினசரி செய்து பழகி வந்தால் உங்களது மனம் ஒரு இடத்தில் சுலபமாக லயித்து இருக்க பழகிவிடும்.
 
ஆனால் இது என்ன சிறு பிள்ளை விளையாட்டு போல இருக்கிறதே என்று எண்ணி அலட்சியப்படுத்தி விடாதீர்கள். மனதை அங்கும் இங்கும் அலைவதைத் தடுத்து நிறுத்தி விரல்கள் மேல் கவனம் வைத்து செயல்படுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
 
- என். தம்மண்ணன்