எளியமுறை குண்டலினி யோகம் - 1

எளியமுறை குண்டலினி யோகம் - 1

நாம் நாள்தோறும் உணவு உண்ணுகிறோம். குளிக்கிறோம். தூங்குகிறோம். ஏன்?

காப்பு, தூய்மை, ஓய்வு ஆகிய மூன்றும் தேவையாக உள்ளன. நமது உடலியக்கத்தின் விளைவாக நம் உடலிலிருந்து எப்போதும் கோடிக் கணக்கான அணுக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. அவ்விழப்பை ஈடுசெய்வதற்காக நாம் உணவு உண்ணுகிறோம்.

உடலிலே அழுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் படிந்து கொண்டேயிருக்கிறது. அவ்வழுக்கைப் போக்கி உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்காகவே நாள்தோறும் குளிக்கிறோம்.

ஐம்புலன்கள், கை, கால் முதலிய உடற் கருவிகளை இயக்கிக் கொண்டே இருக்கிறோம். அதனால் நரம்புகள் சோர்வடைகின்றன. நரம்புகளின் சோர்வைப் போக்கி முறுக்கேற்றிக் கொள்ள ஒய்வு கொள்ளுகிறோம்இ தூங்குகிறோம்.

பரு உடலுக்கு இவ்வாறு காப்பு, தூய்மை, ஓய்வு எந்நாளும் உரிய காலங்களில் தேவையாக உள்ளன. இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.

இவற்றை விழிப்பாற்றல், தற்சோதனை, தவம் எனும் மூன்று சீரிய செயல்கள் மூலம் பெற வேண்டியுள்ளன.

மறதியும்-விழிப்பும்

எல்லாம் வல்ல முழுமுதற் பொருள்தான் இயற்கை. இதனையே தெய்வமென்று பேசப்படுகிறது. இது முதல் நிலையில் சுத்தவெளியாக இருந்தது. பின் தனக்குள் தானே இயக்க விரைவு பெற்று நுண்ணிய இயக்க ஆற்றலாக-பரமாணுக்களாக மலர்ந்தது. பரமாணுக்கள் கூடிய சிறிய, பெரிய கொத்து இயக்க நிகழ்ச்சிகளே போரியக்க மண்டலமாக (Universe) விளங்குகின்றது. இத்தகைய கொத்தியக்க நிகழ்ச்சிகளில் உண்ர்ச்சி நிலையோடு இயங்கும் உருவங்கள் தாம் உயிரினங்கள்.

உயிரினங்களில் பாரிணாமத் தொடர்பால் சிறப்பு பெற்ற நிலையே மனிதன். போரியக்க மண்டலக் காட்சிகளாக உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐவகை விளைவுகளையும் உணரும் ஐம்புலன்களையும், இவையனைத்துக்கும் மூலமான வெட்டவெளியின் பெருமையை உணரத்தக்க ஆறாவது அறிவையும் பெற்று மனிதன் வாழ்கிறான்.