யோகா கலை - 3
இருவர் இணைந்து செய்யும் பயிற்சி முறைகளும் உண்டு.
மேலேயுள்ள படத்தில் பாருங்கள். இது போன்ற கடினமான ஆசனப்பயிற்சி தான் யோகா என்று இல்லை. மென்மையாக, உடலுக்கு எந்த விதமான துன்பத்தையும் தராத சிறந்த பயிற்சிகள் உண்டு.
யோகா ஆசிரியர் ( கவனியுங்கள் - இந்தியர் அல்லர் ) ஒருவர் தன்னுடைய மாணாக்கரைப் பழக்கும் காட்சி.
ஏதாவது புத்தகத்தை வாங்கி யோகா படித்துக்கொள்ளலாம் என்று மணிமேகலைப்பிரசுரத்தின் குண்டலினி யோகம் புத்தகத்தையோ அல்லது இணையத்தில் கிடைக்கும் தகவல்களையோ வைத்துப் பழகுவது முழுமையான பலன் தராது. ஒரு சிறந்த யோகா அறிஞரிடம் பழகுவது சிறந்த பலன் அளிக்கும்.
சக்கரம்,வட்டம் என்று புரியாத விடயங்களைச் சொல்லி பணம் பறிக்கும் கூட்டமும் உண்டு. யோகா என்ற பெயரில் குனிந்து நிமிரவைத்து பணத்தைப் பறித்துக்கொண்டு அனுப்பி விடுவார்கள். அதனால் நல்ல தரமான ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பது முதற்படியாக இருக்கட்டும்.
வெளிநாடுவாழ் இந்திய நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது அவர் சொன்னார், பேசாமல் யோகா கற்றுக்கொடுக்கும் தொழிலில் இறங்கப்போவதாக. நான் அவரிடம் வினவியது, நண்பரே உமக்குத்தான் யோகா தெரியாதே, எனக்குத் தெரிந்து நீர் எந்தப் பயிற்சிக்கும் சென்றதில்லையே என்று. அவரின் பதில் என்ன தெரியுமா?
"இணையம் எதற்கு இருக்கிறது?" என்பதே. அதனால் தாங்களிருக்கும் நகரில் யோகா கலையைக் கற்றுக்கொடுக்க விரும்புபவர்கள் முறையாகப் பயின்று பிறகு தொடங்க வேண்டும். சென்னையில் கூட யோகாவை தொழிலாக ஏற்க நண்பர்கள் முன்வரவேண்டும். எங்கள் நிறுவனத்தில் யோகாப் பயிற்சியாளரின் சம்பளம் (50 மாணவர்கள் - தலா இரண்டாயிரம் மாதம்) - ஒரு லட்சம் ரூபாய். அவர் எங்கள் நிறுவனம் போல பத்து நிறுவனங்களில் செயற்படுகிறார். ஆக யோகா கலை வெறும் கலை மட்டும் அன்று, உபயோகமாகவும் செயற்படுத்தும் முறை உள்ளது. இந்திய அளவில் மாறிவரும் சூழலை யோகாவுக்கும் உங்களுக்கும் சாதகமாகப் பயன்படுத்த தயாரா வாசகர்களே?