ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - மிதுனம்

ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - மிதுனம்

நினைத்ததை செயலில் காண்பிக்க துடிக்கும் மிதுன ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியிலேயே அமர்ந்தும் குரு தனஸ்தானத்தில் அமர்ந்தும் லாபாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பது மிக சிறப்பான நல்ல பலன்களை பெற்று தரும். எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதி நிறைவேறும். சாதனைகளை செய்யும் துணிவு கிடைக்கும். எதிர்கால பலன்கள் சிறப்பாக அமையும். சுதந்திரமாக செயல்பட விரும்புவீர்கள்.
 
புதிய முயற்சிகள் எடுப்பீர்கள். உங்களின் ராசியை கேது பார்வை இடுவதால் நல்ல முயற்சிகள் வெற்றியை தரும். சிலருக்கு பெண்களின் மூலம் ஆதாயம் கிட்டும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் சுய வளர்ச்சியை நம்பி செயல்படுவீர்கள். பாடல்கள் எழுதுதல், மேடை பேச்சு, உள்ளிட்ட கற்பனை திறனை வளர்த்துக் கொள்வீர்கள். சரளமான பேச்சு திறமையை வளர்க்கவும். தொழிலில் வாடிக்கையாளர்களை வசீகரம் செய்ய துணை புரியும். மூன்றாம் அதிபதி சூரியன் பனிரெண்டில் மறைவு பெறுவது அரசியலிலும் அரசு சார்ந்த துறையிலும் பணிபுரிபவருக்கு நன்மை உண்டாகும். சோதனைகளை கண்டு அஞ்சாமல் எதிர்கொண்டு செயல்படுவீர்கள். குடும்ப பாரத்தை குறைந்து கொள்ளும் வாய்ப்பு அமையும்.
 
தனஸ்தானத்தில் குரு அமர்ந்து பார்வை இடும் இடங்கள் மறைவு ஸ்தானங்களாக அமையும் போது ஆறாமிடத்தை பார்வை இடுவது உங்களின் தீராத கடன் தீர்த்து கொள்ள வாய்ப்பு அமையும். வங்கி மூலம் கடன் பெற்று அதிக வட்டியை குறைத்து கொள்ள முயற்சி எடுத்து தன்மை பெறுவீர்கள். அட்டமஸ்தானத்தை பார்வை இடுவது நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வழக்குகள் விரைவில் தீர்வாகும். செய்யாத சில குற்றங்களுக்கு ஏற்பட பழிசொல்லுக்கு தீர்வு கிடைக்கும். யார் மீதும் நீங்கள் பழிசொல்லாமல் குற்றம் குறைகளை களைந்து மேன்மை பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தை குரு பார்வை இடுவது தொழில் ஸ்தானத்தில் அமர்ந்த சனியுடன் இணைந்து செயல்படும் போது செய்யும் தொழில் நல்ல நன்மையும். முன்னேற்றமும் உண்டாகும்.
 
அரசியலிலும், அரசாங்கத்திலும் சேவை செய்து வருபவருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியலில் நல்ல ஆலோசராக இருப்பீர்கள். சாதூர்யமாக பேசி சில காரியங்களை சாதித்து கொள்வீர்கள். ஆறாமிடத்து சந்திரன் சில எதிர்பாராத செலவுகளுக்காக கடன்படும் நிலை உண்டாகும். குடும்பத்தின் தேவைகளுக்கு பணபழக்கம் இருந்து கொண்டே இருக்கும். யாரையும் உதாசீனம் செய்யாமல் எல்லோரிடமும் அன்புடன் இருப்பீர்கள். உடன் பணிபுரியும் நண்பர்களுக்கு பல உதவிகளை செய்வீர்கள். கலைத்துறையினர் படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். சமூக விழிப்புணர்வு சார்ந்த கலை நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கும். குறுகிய முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் பெறுவீர்கள். விரிவான தொழில் வளர்ச்சிக்கு சில காலம் காத்திருப்பது நல்லது. குடும்ப நலன் சார்ந்த சில காரியம் முடிவெடுக்கும் போது அனைவரிடமும் ஆலோசனை கேட்டு பின்பு உங்களின் முடிவை எடுப்து நிறைவான வளம் தரும். கோவில் எழுப்புவது. பராமரிப்பது.. சார்ந்த வகையில் உங்களின் ஆலோசனை  சிறப்பாக அமையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
பச்சை, வெண்மை, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
மேற்கு, தென்மேற்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
புதன், வியாழன், வெள்ளி.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
04-06-2026 வியாழன் காலை 06.42 முதல் 06-06-2026 சனி மாலை 04.15 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து துளசி மாலை சாற்றி, வெண்ணை வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர உங்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.