நாமஜபம் பற்றி ஸ்ரீ ராமகிருஷ்ணர்!

நாமஜபம் பற்றி ஸ்ரீ ராமகிருஷ்ணர்!

பக்தியுடன் இறைவனது நாமத்தைப் பாடு. அதனால் மலைபோல் குவிந்திருக்கும் உனது பாவங்கள் அனைத்தும், நெருப்புப் பொறியால் பஞ்சமலை எரிந்து சாம்பலாவதைப் போன்று அழிந்து போகும்.
 
இறைவனைத் தரிசிக்க விரும்பினால், ஹரி நாமஜபம் செய்வதால் கிடைக்கும் பலனிலும், அதன் மகிமையிலும் உறுதியான நம்பிக்கை கொள். அநித்தியத்திலிருந்து நித்தியப் பொருளைப் பகுத்தறிய முயற்சி செய்.
 
இறைவன் நாமம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதில் தெய்வீக மகிமைகள் அடங்கி உள்ளன. அதை ஜபம் செய்வதால் உடனே பலன் ஏற்படாமல் போகலாம். வீட்டின் கூரையில் விழுந்த விதை, பல நாட்களுக்குப் பிறகு தரையில் விழுந்து விதை, பல நாட்களுக்குப் பிறகு தரையில் விழுந்து முளைக்கிறது. அதுபோல் இறைவனின் நாமஜபத்தால் ஏற்படும் பலன் ஒரு நாள் வந்தே தீரும்.
 
உலக ஆசைகளில் பற்று கொண்டவர்களுக்குத் துவைத மார்க்கத்தைப் போதிக்க வேண்டும். நாரதர் காட்டிய வழியில் இறைவனின் திருநாமத்தை உரத்த குரலில் கூறும்படிச் செய்ய வேண்டும்.
 
அமுதமாகிய கடலில் ஒருவன் தெரிந்த விழுந்தாலும் தெரியாமல் விழுந்தாலும் மரணம் இல்லாதவன் ஆகிறான். அது போன்று இறைவனின் நாமத்தைச் சொல்பவன், அதன் பெருமையை அறிந்து கூறினாலும் அறியாமல் கூறினாலும் மரமணமற்றவன் ஆகிறான்.
 
காலையிலும் மாலையிலும் கைகளால் தானம் இட்டபடி ஹரிநாம் சங்கீர்த்தனம் செய்வாய்.
 
மரத்தின் அடியில் இருந்து கொண்டு கைதட்டினால் மரத்தில் இருக்கும் பறவைகள் பறந்துவிடுகின்றன. அது போல் ஹரிநாமத்தைக் கைதட்டிப் பாடினால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் பறந்தோடி விடும்.
 
தெரிந்தும் தெரியாமலும் எந்த நிலையில் ஒருவன் இறைவன் நாமத்தை ஜபம் செய்தாலும் அவனுக்கு அது பலனளிக்கும்.
 
- கமலாத்மானந்தர்