ஏழுமலையானை தரிசிக்க புரட்டாசி சனிக்கிழமை உகந்தது!

ஏழுமலையானை தரிசிக்க புரட்டாசி சனிக்கிழமை உகந்தது!

திருமலைக்குச் சென்று புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏழுலையானை தரிசிப்பது சிறப்பானதாக கருதப்படுகின்றது. திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள் உள்ளூரிலேயே உள்ள பொருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடுகள் செய்யலாம். அத்துடன் வெங்கிடாஜலபதி திருவுருவப் படத்தை வைத்து வீட்டிலேயே வழிபட்டு வரலாம். இவ்விதமான வழிபாடுகளில் “வெங்கடேச அஷ்டகம்” சொல்லி பூஜை செய்வதும், துளசி தளங்களால் அர்ச்சனை செய்வதும், சுத்தமான நெய் கொண்டு மாவிளக்கு ஏற்றுவதும் மிகவும் விசேடமானதாக கொள்ளப்படுகின்றது. புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் இந்த வழிபாடானது வறுமையை நீங்கச் செய்து செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை. 
 
சீனிவாச பக்தர்கள், திருப்பதி வெங்கடாஜலபதிக்கு உகந்த நாளாக சனிக்கிழமையை கொண்டாடுகின்றார்கள். அதிலும் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளை ஏழுமலையானை மனமார நினைந்து வணங்குதற்குரிய நாளாக போற்றுகின்றார்கள். புரட்டாசி சனிக்கிழமை தினங்களில் வெங்கடாஜலபதியை நினைந்து விரதமிருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை அவர் பக்தர்களுக்கு அளித்து வருடம் முழுவதும் துன்பங்களை அகற்றி ஆனந்தம் பெருகச் செய்து வாழ வைப்பார் என்பது நம்பிக்கை. 
 
மேலும் ஏழரைச் சனியால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமை விரதம் அனுஷ்டித்தால் சனி பகவானின் தொல்லைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை கிட்டும் என்பது நம்பிக்கை. இதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது, சனிபகவான் ஒரு முறை திருமலைக்குச் சென்ற போது தானே துன்பப்பட்டு அங்கு வெங்கடாஜலபதியாய் இருப்பது மகாவிஷ்ணுவே என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்டு கொண்டார். மேலும் விஷ்ணு பக்தர்களை அவர் துன்பப்படுத்துவதில்லை என்னும் சங்கல்பத்தையும் மேற்கொண்டார். சனி பகவான் விஷ்ணுவிடம் கேட்டு கொண்டதற்கிணங்க சனிக்கிழமை ஏழுமலையானுக்கு உகந்ததாக கொள்ளப்பட்டது.