அமிர்தகடமாய் மாறிய திருநீலகண்டர்!

அமிர்தகடமாய் மாறிய திருநீலகண்டர்!

சிவபெருமான் அமிர்த கடேசுவரராகத் திருக்கடவூரில் விளங்குகிறார் அல்லவா? திருப்பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விஷத்தை விழுங்கி நீல கண்டனான பெருமான் அமிர்த கடமாகவே மாறியது பெரிய விந்தை.
 
அமிர்தம் கிடைத்ததும் தேவர்கள் வில்வவனம் என்ற இடத்தில் குடத்தை வைத்துவிட்டுக் கடைந்த அலுப்புத் தீர நீராடி வரப் போனார்கள். குளிக்காமல் சாப்பிட முடியுமா? திரும்பி வந்து குடத்தை எடுக்க முயன்ற போது அது பாதாளம் வரை படர்ந்து, வானில் உயர்ந்து லிங்கத் திருமேனியாய் மாறிவிட்டது. அமிர்தக்குடமே சிவலிங்கமான படியார் அமிர்தகடேசர் என்ற திருநாமம் அவருக்கு உண்டாயிற்று. வில்வவனத்துக்கும் கடவூர் என்ற பெயர் ஏற்பட்டது. (மண்பானையை கடம் என்றுதானே சொல்கிறோம்?)
 
காலனைக் காலால் உதைத்த மருந்தான சிவபெருமான் “அமிர்தத்தை அருகில் உள்ள ஞானச் சுனையில் பெற்றுக் கொள்ளுங்கள்!“ என்று அருளினார். ஆனால் என்ன ஏமாற்றம் குளத்தில் அமிர்தம் கிடைக்கவில்லை. சோர்ந்து போன தேவர்கள் தேடித்தேடி வருந்தினார்கள். “கணபதியை பூஜியுங்கள்!” என்ற குரல் கேட்டது. ஓம்கார வடிவமான கணபதியை தியானித்து வழிபட்டார்கள் தேவர்கள்.
 
“என்னை மறந்தால் அமிர்தத்தை ஒளிந்து வைத்தேன். இப்போது போய்ப் பாருங்கள்” என்றார் கணபதி. ஞான வாவியிலிருந்து அமுதம் கிடைத்தே விட்டது. கணபதியும் கள்ளவாரணப் பிள்ளையார் என்று பெயர் பெற்றார். குளமும் அம்ருதபுஷ்கரிணி ஆயிற்று.
 
திருக்கடவூருக்குப் பிஞ்சில் வனம் என்றும் ஒரு பெயர். பனிமலையில் வீற்றிருக்கும் பிஞ்ஞகன் பிஞ்சிலப் பூவை உகந்து சூடுகிறான். இங்கே, தவ விருட்சமே ஜாதிமல்லிகைக் கொடி. திருநெல்வேலி பக்கத்தில் ஜாதிப் பூவைப் பிச்சிப்பூ என்பார்கள்.
 
மார்க்கண்டேயர் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய கங்கையைப் பிரார்த்தித்தாராம். கங்கை ஒரு கிணற்றிலிருந்து பொங்கிவர அதில் ஜாதி மல்லிகைக் கொடி வந்தது. அதன் மலர்களைக் கொண்டு மார்க்கண்டேயர் அர்ச்சனை செய்தார். இந்தக் கிணற்று நீரைத்தான் அமிர்தகடேசர், அபிராமவல்லிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். தினந்தோறும், ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இந்த கங்கையிலிரந்துான் தீர்த்தம் வருகிறது. அதற்கென்று வண்டி, மாடு, ஆட்கள் என்று ஒரு தனி நிர்வாகமே இயங்குகிறது. பங்குனி மாதம் அசுவினி நக்ஷத்திரத்தில் மார்க்கண்டேயர் புறப்பட்டுத் திருக்கடவூர் மயானம் கோயிலை அடுத்து உள்ள இந்த கங்கைக் கரையில் தீர்த்தம் வழங்குவார். கிணறு வற்றியதில்லை. இந்த நீரை வேறு எதற்கும் எடுப்பதில்லை.
 
அதைப் போலவே ஜாதிபுஷ்பம் திருக்கடவூரில் சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படுகிறது!
 
“கடையுடை நன்னெடு மாடமோங்குங் கடவூர் தனுள்”
 
என்று நாவுக்கரசர் பாடிய கோவில். சந்நிதித் தெருவே கலகலப்பாக இருக்கிறது. அர்ச்சனைத் தட்டுக்களை வாங்கிக் கொண்டு உள்ளே போனால் ராஜகோபுரத்தையும் அடுத்த கோபுரத்தையும் இணைத்துப் பெரிய மண்டபம் சமீப காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கேதான் கால ஸம்ஹாரமூர்த்தி பவனி வரும் போது “நடனம்” நடக்குமாம். ரொம்பப் பிரமாதமாக இருக்குமாம்.
 
இரண்டு கோபுர வாசல்களையும் திருச்சுற்றுக்களையும் கடந்து கோவிலுக்குள் பிரவேசித்தால் கலகலவென்று பேச்சொலி மந்திரங்கள் சொல்லும் ஒலி, திடீரென்று வாத்ய கோஷம், வயதான தம்பதியர் பலர் மங்களகரமாக இடையில் பட்டாடையும் கழுத்தில் மலர்மாலைகளுமாய் களையோடு காணப்படுகிறார்கள். சதாபிஷேகம் செய்து கொண்ட தம்பதிகளைப் பார்கிறோம். இன்முகத்துடன் பெருமித நடையோடு இந்தத் தம்பதிகள் உலவுகிறார்கள். சிலர் ஹோமம் வளர்க்கிறார்கள். கள்ள வாரணப் பிள்ளையார் சந்நிதியில் அறுபதாம் கல்யாணம் செய்து கொண்ட தம்பதிகள் நிற்கிறார்கள். குடும்பத்தினர் முகத்தில் மகிழ்ச்சி.
 
ஆனால் ஒன்று மட்டும் புரிய மாட்டேன்கிறது. நாம் ஏன் இவ்வளவு பேசுகிறோம்? கோவிலில் மங்கல நிகழ்ச்சி நடக்கும் போது மந்திரகோஷம் காதில் விழுவது எவ்வளவ ரம்யமாக இருக்கும்? நம் மனத்தை ஒருமுகப்படுத்தி சுவாமி தரிசனம் செய்ய மந்திரங்கள் கேட்பது உதவியாக இருக்கும். கோவிலுக்குள்ளே அமைதி காக்க நாம் எப்போது கற்றுக் கொள்ளப்போகிறோம்?
 
கள்ள வாரணருக்கு ஒரு சிதறு காய் போட்டுவிட்டு சுவாமி சந்நிதிக்குப் போகிறோம். பிச்சிப்பூ மாலை அணிந்து சரவிளக்கின் ஒளியில் அருவமாகவும் உருவமாகவும் ஈசனைத் தரிசனம் செய்கிறோம். தீபாராதனை செய்யும் போதுதான் அமுதலிங்கத்தின் உருவம் தெரிகிறது. இவருடைய திருமேனியில் கால ஸம்ஹாரமூர்த்தி வெளிப்பட்டதால் ஏற்பட்ட வடுவும், பாசம் கட்டிய தழும்பும் தெரிகிறதாம். இவருக்குக் கடவூர் வீரட்டேசுவரர் என்ற திருநாமமும் உண்டு.
 
- ஆனந்தி